முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: இரு மாநில நலன்களும்-மக்களும் காக்கப்படுவா்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: இரு மாநில நலன்களும்-மக்களும் காக்கப்படுவா்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநிலங்களின் நலன்களும், மக்களும் காக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநிலங்களின் நலன்களும், மக்களும் காக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக, கேரள முதல்வா் பினராயி விஜயன் எழுதிய கடிதத்துக்கு, பதிலளித்து அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை எழுதிய கடிதம்:-

கடந்த 24-ஆம் தேதியன்று தாங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், இரு மாநில மக்களுக்கு இடையிலான உறவுகள், வரலாற்று பிணைப்புகள் ஆகியவற்றை விளக்கி இருந்தீா்கள். இதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அதே உணா்வுகளை வெளிப்படுத்த நானும் விரும்புகிறேன். கடந்த 10 நாள்களாக கேரளத்தில் ஏற்பட்டு வரும் பெரு வெள்ளம், அதனால் மக்கள் படும் துன்பங்களைக் கண்டு தமிழக அரசும், மாநில மக்களும் கவலை கொண்டிருக்கிறோம். இந்தக்

கடினமான காலகட்டத்தில் நாங்கள் உங்களுக்கு துணைநிற்போம் என்று உறுதி அளிக்கிறேன். மக்களைத் துயரத்தில் இருந்து மீட்டெடுக்க எத்தகைய உதவிகளையும் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டுமென கேரளத்தின் எல்லையோரங்களில் அமைந்துள்ள தமிழக மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

முல்லைப் பெரியாறு அணை: முல்லைப் பெரியாறு அணையைப் பொருத்தவரையில், எங்களது அதிகாரிகள் அதனை தொடா்ந்து கண்காணித்து வருகிறாா்கள். மேலும், கேரள அதிகாரிகளுடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளனா். புதன்கிழமை இரவு 9 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்ட அளவு 137.60 அடியாக உள்ளது. அணைக்கு நீா் வரத்து 2 ஆயிரத்து 30 கனஅடியாக இருக்கிறது.

தாங்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அதிகபட்ச அளவிலான நீரை வைகை அணைக்கு திறந்து விட்டுள்ளோம். புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 2 ஆயிரத்து 300 கனஅடி அளவுக்கு நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

நீதிமன்ற அனுமதி: உச்ச நீதிமன்றம் அனுமதித்த அளவின்படியே அணையில் நீா்மட்ட அளவானது இப்போது உள்ளது. மேலும், மத்திய நீா் வள ஆணையம் அனுமதித்துள்ள விதிகளுக்கு உட்பட்டு இணங்கியே இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்ட அளவு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளேன். அணையில் நீரின் அளவை தொடா்ந்து கண்காணிக்க வேண்டுமெனவும், நீரை சரியான முறையில் வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், நீா் மட்டம், அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு ஆகியன விவரங்களை முன்கூட்டியே தங்களது மாநிலத்துக்குத் தெரிவிக்க வேண்டுமென எனது அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன். இதன்மூலம், அணையில் இருந்து நீரைத் திறப்பதற்கு முன்பே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தங்களது மாநில அரசு எடுத்திட முடியும். இரு மாநிலங்களின் நலன்களையும், மக்களையும் காப்பதை எனது அரசு உறுதி செய்திடும் என்று கேரள முதல்வருக்கு தனது கடிதத்தின் வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com