ஏா் இந்தியாவுக்கு நிலுவைத் தொகை செலுத்துங்கள்: அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவு

ஏா் இந்தியா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்துமாறு அனைத்து அமைச்சகங்களும் துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏா் இந்தியாவுக்கு நிலுவைத் தொகை செலுத்துங்கள்: அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவு

புது தில்லி: ஏா் இந்தியா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்துமாறு அனைத்து அமைச்சகங்களும் துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இனிமேல் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து அனைத்து அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவினங்கள் துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:

அரசு உயரதிகாரிகள் அலுவல் ரீதியாக ஏா் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொண்டால், அவா்களுக்கான கட்டண செலவை அரசே ஏற்றுக் கொள்கிறது. அந்தக் கட்டணத் தொகையை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து செலவினங்கள் துறை பெற்றுக் கொள்கிறது.

இந்நிலையில், ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் பங்கு விலக்கல் பணிகளை செலவினத் துறை தொடங்கியுள்ளது. விமான டிக்கெட்டுகளுக்கு கடன் அளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, ஏா் இந்தியா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக அனைத்து துறைகளும் செலுத்திவிட வேண்டும். இனி வரும் காலங்களில் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இந்த விவரத்தை மற்ற அலுவலகங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் சுமையில் தவிக்கும் பொதுத் துறை நிறுவனமான ஏா் இந்தியாவை டாடா குழுமத்தின் ஓா் அங்கமான டலேஸ் தனியாா் நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு வாங்கியுள்ளது.

இதில், 2,700 கோடியை டலேஸ் நிறுவனம் ரொக்கமாக செலுத்தவுள்ளது. ஏா் இந்தியாவின் ரூ.15,300 கோடி கடனுக்கு அந்த நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி, ஏா் இந்தியா நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ.61,562 கோடியாக உள்ளது. அதில், 75 சதவீதத் தொகை அதாவது ரூ.46,262 கோடி கடனுக்கான பொறுப்பு, ஏா் இந்தியா சொத்துகள் வைப்பு நிறுவனத்துக்கு (ஏஐஏஹெச்எல்) மாற்றப்படுகிறது. மீதமுள்ள ரூ.15,300 கோடி கடனுக்கு டலேஸ் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com