சுதந்திர இந்தியாவின் வெற்றிகரமான நிர்வாகி பிரதமர் மோடி: அமித் ஷா புகழாரம்

சுதந்திர இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான நிர்வாகியாக பிரதமர் நரேந்திர மோடி திகழ்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா.

புது தில்லி: சுதந்திர இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான நிர்வாகியாக பிரதமர் நரேந்திர மோடி திகழ்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற "இரண்டு பத்தாண்டுகளில் நரேந்திர மோடியின் ஆட்சித் தலைமை' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் அமித் ஷா பேசியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவொரு நிர்வாக அனுபவமும் இல்லாமல் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றார். அப்போது புஜ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குஜராத் மாநிலத்தை நிலைகுலையச் செய்திருந்தது. அதை வெற்றிகரமாக சரிசெய்த மோடி, அடுத்து பல கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதிலும் வெற்றிகரமான நிர்வாகியாகத் தன்னை நிரூபித்தார்.
குஜராத்தின் மின்னுற்பத்தி நிலையை முழுமையாக மாற்றியமைத்ததுடன், வனப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களின் கல்வி, மேம்பாட்டை  அவர் உறுதிப்படுத்தினார். மோடியின் ஆட்சிக் காலத்தில், 13 ஆண்டுகளில் குஜராத் மாநிலம் வேளாண் துறையில் 10 சதவீத வளர்ச்சி கண்டது.
கடந்த 2014-ஆம் ஆண்டு வரை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் இருந்தபோது, அனைத்து இடங்களிலும் முடிவு எடுக்க முடியாத சூழல் காணப்பட்டது. அப்போதைய அரசுக்கென தேசிய பாதுகாப்புக் கொள்கை இல்லாததால், நாட்டின் கெüரவம் காற்றில் பறந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் ரூ. 12 லட்சம் கோடி மதிப்பிலான ஊழல்கள் நடந்தன. இந்திய ஜனநாயகம் அழிந்துபோகுமோ என்ற அச்சம் அப்போது ஏற்பட்டிருந்தது.
2014-இல் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, நாட்டின் நிர்வாகமும் நிலைமையும் மேம்படும் என்று மக்கள் நம்பினார்கள். அதன்படியே தற்போது நாட்டின் நிர்வாக அமைப்பு மேம்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரச்னை என்பது நிர்வாகம், பொருளாதார வளர்ச்சி தொடர்பானது மட்டுமல்ல; நாட்டின் கெüரவமும் கலாசாரமும் பாதுகாக்கப்படுவதுடன் அதன் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு வித்தியாசமான அணுகுமுறைகளைக் கொண்ட, மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவரை நாம் கொண்டிருக்க வேண்டும். அந்தத் தலைவர் ஏழைகளின் வலியை அறிந்திருப்பவராக இருக்க வேண்டும். பொருளாதார மேம்பாடு, நல்லாட்சி, வறுமை ஒழிப்பு ஆகிய அனைத்தும் மேம்படுவது அவசியம். பரம ஏழைகளும்  வளர்ச்சியின் பலனை அடைய வேண்டும். நாடு பாதுகாப்பானதாக மாறுவதுடன், வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டும். மக்கள் சீரான கல்வியைக் கற்கவும், நமது கலாசாரப் பெருமை மேம்படவும், நாட்டின் கெüரவம் உயரவும் வேண்டும். இவை அனைத்தும் நடந்தால் மட்டுமே ஒருவர் வெற்றிகரமான நிர்வாகியாகிறார்.
நரேந்திர மோடி தன்னை தலைமை சேவகராக (பிரதான் சேவக்) கூறிக்கொண்டாலும், சுதந்திரத்துக்குப் பின் நாடு பெற்ற வெற்றிகரமான நிர்வாகி அவர் மட்டுமே என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
கடந்த 2016-ஆம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருந்தது. அந்த அறிவிப்பால் அரசுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால்,  மக்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக நின்று, அவரது முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர். கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது என்பதையும், பிரதமருக்கு இதில் உள்நோக்கம் ஏதுமில்லை என்பதையும் மக்கள் உணர்ந்திருந்தனர்.
இஸ்லாமிய பெண்களைப் பாதுகாக்கும் வகையில் முத்தலாக்கிற்கு எதிரான சட்டம், ராணுவ வீரர்களுக்கு ஒரு பதவி - ஒரே ஓய்வூதியம், முப்படை தலைமைத் தளபதி பதவி உருவாக்கம் போன்றவை அரசால் எடுக்கப்பட்ட கடினமான முடிவுகளாகும்.
பாகிஸ்தானுக்குள் ஊடுருவி நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பின் இந்திய எல்லையில் யாரும் வாலாட்ட முடியாது என்ற செய்தி உலகம் முழுவதும் சென்றடைந்தது. 
இந்த முடிவை நீங்கள் நரேந்திர மோடியின் துணிச்சலான நடவடிக்கையாகவும், தேசப் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவாகவும் பார்க்கலாம்.
பிரதமர் மோடி தேசிய பாதுகாப்புக் கொள்கையையும் நாட்டின் வெளியுறவுக் கொள்கையையும் தெளிவாகப் பிரித்து வைத்துள்ளார். நாம் அண்டை நாடுகளுடனான நட்பை விரும்புகிறோம்; அதேசமயம் நாட்டின் இறையாண்மை மீதான எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் ஏற்க மாட்டோம்.
சிறப்பு சட்டப் பிரிவு- 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து காஷ்மீரில் எந்த இடத்திலும் வன்முறை நிகழ அரசு அனுமதிக்கவில்லை. அயோத்தி ராமஜன்ம பூமி தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்தபோதும் நாட்டில் எந்த முணுமுணுப்பும் இல்லை.
மொத்தத்தில் நரேந்திர மோடி, இந்திய கடவுச்சீட்டின் மதிப்பை உலக நாடுகள் மத்தியில் உயர்த்தி, நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com