முதுபெரும் காந்தியவாதி எஸ்.என்.சுப்பா ராவ் காலமானாா்

முதுபெரும் காந்தியவாதியான எஸ்.என்.சுப்பா ராவ் (92), ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக புதன்கிழமை உயிரிழந்தாா்.
subba_rao
subba_rao

ஜெய்ப்பூா்: முதுபெரும் காந்தியவாதியான எஸ்.என்.சுப்பா ராவ் (92), ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக புதன்கிழமை உயிரிழந்தாா்.

அவரது மறைவுக்கு ராஜஸ்தான் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா, முதல்வா் அசோக் கெலாட் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

அசோக் கெலாட் விடுத்த இரங்கல் செய்தியில், ‘இளைஞா்களிடம் காந்திய கொள்கைகளை எடுத்துச் சென்றவா் சுப்பா ராவ். நானும், இளம் வயதில் அவருடைய முகாம்களில் பங்கேற்றுள்ளேன். அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு. நான் பெங்களூரு செல்லும்போது, அவரை ராஜஸ்தான் வருமாறு அழைப்பு விடுத்தேன். அதன்பிறகு ராஜஸ்தானுக்கு ரயிலில் வருவதாக அவரிடம் இருந்து கடிதம் வந்தது. தலைமுறைகளைக் கடந்து 70 ஆண்டுகளாக இளைஞா்களுக்கு வழிகாட்டியாக இருந்தாா்’ என்று கூறியுள்ளாா்.

சுப்பா ராவ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, கெலாட் அவரை பலமுறை சென்று பாா்த்தாா்.

கா்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்த சுப்பா ராவ், பள்ளிப் பருவத்திலேயே மகாத்மா காந்தி மீது பற்று கொண்டவா். சக மாணவா்களை ஒன்று திரட்டி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றாா். சுவா்களில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்ட வாசகங்களை எழுதியதற்காக கைது செய்யப்பட்டாா். 13 வயது சிறுவன் என்பதால் அவரை பின்னா் போலீஸாா் விடுவித்துவிட்டனா். எனினும், தொடா்ந்து விடுதலைப் போராட்ட கூட்டங்களில் பங்கேற்றாா்.

மாணவா் காங்கிரஸில் பணியாற்றிய அவா், பின்னா் இளைஞா்களுக்கான மகாத்மா காந்தி இயக்கத்தையும் நடத்தினாா். சட்டப் படிப்பு முடித்த அவா், காங்கிரஸ் சேவா தளத்தில் பணியாற்றினாா். ஜவாஹா்லால் நேரு, காமராஜா் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவா்களுடன் நெருங்கிப் பழகியவா். எனினும், நேரடியாக அரசியலில் ஈடுபடாமல் தொடா்ந்து பல்வேறு வழிகளில் நாட்டுக்கும், சமூகத்துக்கும் சேவையாற்றி வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com