ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவுடன் விரைவில் இணைக்கப்படும்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைக் கைப்பற்றும் எண்ணம் ஏதும் இல்லை; ஆனால், ஒட்டுமொத்த காஷ்மீர் பகுதியும் விரைவில் இந்தியாவுடன் இணைக்கப்படும் என நம்புகிறேன்
1947, அக்டோபர் மாதம் பாகிஸ்தான் ராணுவம் பழங்குடியினர் போர்வையில் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களை ஸ்ரீநகரில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் நிகழ்த்திக் காட்டிய ராணுவ வீரர்க
1947, அக்டோபர் மாதம் பாகிஸ்தான் ராணுவம் பழங்குடியினர் போர்வையில் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களை ஸ்ரீநகரில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் நிகழ்த்திக் காட்டிய ராணுவ வீரர்க


ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைக் கைப்பற்றும் எண்ணம் ஏதும் இல்லை; ஆனால், ஒட்டுமொத்த காஷ்மீர் பகுதியும் விரைவில் இந்தியாவுடன் இணைக்கப்படும் என நம்புகிறேன் என்று இந்திய விமானப் படை மேற்குப் பிரிவு தளபதி ஏர் மார்ஷல் அமித் தேவ் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஜம்மு காஷ்மீர் பகுதியை ஆண்ட மன்னர் ஹரி சிங், தனது ஆட்சிப் பகுதியை தனிநாடாக்க விரும்பினார். ஆனால், அப்பகுதி மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். இந்த இடைக்காலத்தில் ஜம்மு- காஷ்மீரை ஆக்கிரமிக்க, பழங்குடியினர் என்ற பெயரில் பாக். ராணுவம் ஊடுருவியது. எனவே, 1947 அக். 26-இல் இந்தியாவுடன் இணைவதாக மன்னர் ஹரி சிங் அறிவித்தார்.

அதையடுத்து, பாக். ராணுவத்தின் தாக்குதலிலிருந்து ஜம்மு- காஷ்மீர் பகுதியைக் காப்பாற்ற இந்திய ராணுவமும் விமானப் படையும் களமிறங்கின. அதற்காக 1947 அக். 27-இல் பட்காம் பகுதியில் விமானப் படை வீரர்கள் தரையிறங்கினர். அவர்கள் ஸ்ரீநகர் விமானத் தளத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால், தரைப்படையினர் முன்னேற முடிந்தது. அதன்விளைவாக ஜம்மு-காஷ்மீரின் பெரும் பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்து காக்கப்
பட்டது.

பட்காம் பகுதியை இந்தியா மீட்டதன் 75-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி ஸ்ரீநகரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப் படையின் மேற்குப் பிரிவு தளபதி ஏர் மார்ஷல் அமித் தேவ் பங்கேற்றார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 1947, அக். 27 அன்று இந்திய விமானப் படை மற்றும் ராணுவத்தின் மூலம் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால், காஷ்மீர் பகுதி மக்கள் சுதந்திரத்தின் பலனைப் பெற்றுள்ளனர். 1947-இல் காஷ்மீர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் பழங்குடியினர் போர்வையில் தாக்குதல் நடத்தியபோது, இப்பகுதியை மீட்க இந்தியப் படைகள் காஷ்மீரில் தரையிறங்கின. நமது வீரர்களின் தியாகத்தாலும் தீரத்தாலும் இப்பகுதிகள் காக்கப்பட்டன. அப்போது இந்தியா போர்முனையில் முன்னிலையில் இருந்தது. ஐ.நா. சபை மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்பட  ஒட்டுமொத்த காஷ்மீரையும் நாம் அன்றே மீட்டிருப்போம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவுடன் விரைவில் இணையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆயினும், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியைக் கைப்பற்றும் எண்ணம் இப்போது இல்லை. ஆனால், கடவுளின் விருப்பம் அதுவாக இருக்கிறது. ஏனெனில் அப்பகுதியிலுள்ள மக்கள் பாகிஸ்தான் அரசால் இரண்டாம்தரக் குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களும் விரைவில் சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள்.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரி மக்களுக்கும், நமது நாட்டிலுள்ள காஷ்மீரி மக்களுக்கும் உறவு உள்ளது. ஒரே ஒரு காஷ்மீர் தான்; தேசமும் ஒன்றேதான். இன்றோ, நாளையோ தேசம் ஒன்றுபடும் வரலாறு நிகழ்ந்தே தீரும்.
இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக மாற்றம் கண்டு வருகிறது. நாமும் மாற்றத்தை சுவீகரித்துக் கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறும் நாடு, ராணுவத்தையும் வலிமையானதாக்கிக் கொண்டாக வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் நாட்டுக்காக நமது கடமையை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். நாட்டின் பாதுகாப்புச் சவால்களைச் சந்திக்க எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.

இந்தியாவுக்கு வெளியே இருந்து டிரோன்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலைச் சமாளிக்க போதிய தளவாடங்கள் தயாராக உள்ளன. டிரோன் தாக்குதல்கள் சாதாரணமான சவால்தான். அதைச் சமாளிக்கும் திறமையை நாம் பெற்றிருக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com