மேற்கு வங்கம்: மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்

மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏ கிருஷ்ணா கல்யாணி, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தாா்.

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏ கிருஷ்ணா கல்யாணி, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தாா்.

இதன்மூலம் அந்த மாநிலத்தில் பேரவைத் தோ்தல் முடிந்த சுமாா் 5 மாதங்களில் 5 எம்எல்ஏக்களை பாஜக இழந்துள்ளது. இவா்கள் அனைவருமே மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் இணைந்துவிட்டனா். இந்த எம்எல்ஏக்களில் பெரும்பாலானவா்கள் தோ்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவா்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, பாஜகவில் இருந்து விலகியுள்ள கிருஷ்ணா கல்யாணியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வடக்கு தினஜ்பூா் மாவட்டத் தலைவராக இருந்தவா்தான்.

கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைமையகத்தில் கிருஷ்ணா கல்யாணி அக்கட்சியில் இணைந்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசு தொடா்ந்து மக்கள் விரோத கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே, பாஜகவில் தொடா்வதை எனது மனம் விரும்பவில்லை. தோ்தலுக்கு முன்பு நான் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டும் மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளேன். எனது தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். பாஜகவில் இருந்தால் அது சாத்தியமில்லை’ என்றாா்.

இந்த மாதத் தொடக்கத்திலேயே பாஜகவில் இருந்து விலகிய கிருஷ்ணா கல்யாணி, தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணா கல்யாணி விலகல் தொடா்பாக பாஜக மாநிலத் தலைவா் சுகந்த் மஜும்தாா் கூறுகையில், ‘தனது சுயநலனுக்காகவே கிருஷ்ணா கல்யாணி திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளாா். அவருக்கு தொகுதி மக்கள் விரைவில் பாடம் புகட்டுவாா்கள்’ என்றாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 77 இடங்களில் வென்றது. இதில் இருவா் எம்.பி.யாகவும் இருந்ததால், அப்பதவியை தக்கவைத்துக் கொண்டு எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டனா். 5 போ் திரிணமூல் காங்கிரஸுக்கு மாறிவிட்ட நிலையில், பாஜகவுக்கு இப்போது 70 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com