முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி மாவட்டத்திற்கு இரண்டு மதகுகள் மூலமாக 514 கனஅடி தண்ணீர் வெள்ளிக்கிழமை காலை 7:30 மணிக்கு திறந்து விடப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் 137 அடிக்கு மேல் தேக்க வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் 1369.5 அடி உயரமாக, நவ.10 வரை  பராமரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில் வெள்ளிக்கிழமை அணையின் நீர்மட்டம் 138.70 அடி உயரமாகியது.

2 மதகுகள் திறப்பு

வெள்ளிக்கிழமை கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், வருவாய் துறை அமைச்சர் ராஜன், தமிழக தரப்பில் அணையின் செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி பொறியாளர்கள் டி.குமார், பி.ராஜகோபால், எம்.பிரவீன்குமார் ஆகியோர் அணைப்பகுதிக்கு சென்றனர்.

அங்கு இடுக்கி மாவட்டத்திற்கு உபநீர் செல்லும் வி-3, வி-4 என இரண்டு நீர்வழி போக்கி மதகுகளை (மொத்தம் 13 மதகுகள்) 30 மீட்டர் உயரத்திற்கு திறந்தனர்.

அதன் மூலம் விநாடிக்கு, 257 கன அடி என இரண்டு மதகுகள் மூலமாக விநாடிக்கு,  514 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 

நிகழ்வின்போது இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ், நீர்ப்பாசனத் துறை முதன்மை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் இருந்தனர்.

 அணை நிலவரம்

வெள்ளிக்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 138.70 அடி ( மொத்த உயரம் 142), நீர் இருப்பு 6,798 மில்லியன் கன அடி, நீர் வரத்து விநாடிக்கு 4,194 கன அடி, தமிழக பகுதிக்கு விநாடிக்கு 2,344 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

விவசாயிகள் அதிருப்தி

இதுபற்றி பெரியாறு வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில்,  தமிழக வரலாற்றில் ஐந்து மாவட்ட மக்களுக்கு இன்று கருப்பு நாள்.

பெரியாறு பாசன பரப்பளவில் கையளவு நிலம் இல்லாத சேகர், ராமமூர்த்தி போன்ற இளைஞர்கள் பெரியாறு அணை உரிமைக்காக உயிர் தியாகம்  செய்ததற்கு பலன் கிடைக்காமல் போய்விட்டது.

இடுக்கி மாவட்டத்தில் தண்ணீர் திறப்பின் போது குறைந்தபட்சம் தேனி மாவட்ட ஆட்சியரையாவது அழைத்திருக்கலாம் அதுவும் முடியாமல் போனது.

பெரியாறு அணையை அகற்றுவோம் என்று கூறுகின்ற கேரள அமைச்சர்கள் இரண்டு பேர் அணைக்குள் வந்து சென்றது மிகப்பெரிய பாவமான செயலாகும். இந்நிலையில் தமிழக அரசின் நிலை என்ன என்பது பற்றி  விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com