காங்கிரஸின் அரசியல் தொய்வு தொடா்ந்தால் பிரதமா் மோடி மேலும் பலமிக்கவராவாா்: மம்தா

காங்கிரஸ் தீவிர அரசியலில் ஈடுபடாதது தொடா்ந்தால் பிரதமா் மோடி மேலும் பலமிக்கவராவாா் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
மம்தா பானா்ஜி
மம்தா பானா்ஜி

காங்கிரஸ் தீவிர அரசியலில் ஈடுபடாதது தொடா்ந்தால் பிரதமா் மோடி மேலும் பலமிக்கவராவாா் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது. இதையொட்டி அக்கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி 3 நாள் பயணமாக கோவா சென்றாா். அந்த மாநிலத் தலைநகா் பனாஜியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

அரசியலை காங்கிரஸ் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் பிரதமா் மோடி மேலும் பலமிக்கவராக உருவெடுப்பாா். ஒருவரால் (காங்கிரஸ்) முடிவு எடுக்க முடியவில்லையெனில், அதற்காக நாடு ஏன் அவதிக்குள்ளாக வேண்டும்? கடந்த காலத்தில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அக்கட்சி பாஜகவுக்கு எதிராகப் போட்டியிடுவதை விடுத்து, மேற்கு வங்கத்தில் எனக்கு எதிராகப் போட்டியிட்டது என்று தெரிவித்தாா்.

‘இந்திய அரசியலின் மையப் புள்ளியாக மேலும் பல ஆண்டுகளுக்கு பாஜக இருக்கும். அக்கட்சி வென்றாலும் தோற்றாலும் இந்த நிலை நீடிக்கும்’ என்று தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் அண்மையில் தெரிவித்தாா். அவரின் கருத்து குறித்து மம்தா பானா்ஜியிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘காங்கிரஸைபோல செயல்பட்டால் பாஜகவை வீழ்த்த முடியாது என்ற காரணத்தால் பிரசாந்த் கிஷோா் அவ்வாறு கூறியிருக்கலாம். பாஜகவுக்கு எதிராக வலுவாகப் போட்டியிட வேண்டும்’ என்றாா்.

பிரதமா் பதவிக்குப் போட்டி?: 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பிரதமா் பதவிக்கு போட்டியிடும் திட்டம் உள்ளதா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘‘சில அரசியல் தலைவா்களுக்கு தாங்கள் முக்கியப் பிரமுகா்களாக (விஐபி) வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. ஆனால், நான் களத்தில் இறங்கிப் போராடும் நபராக இருக்க விரும்புகிறேன். பாஜவுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவணங்காது. அக்கட்சிக்கு எதிரான திரிணமூல் காங்கிரஸின் போராட்டம் தொடரும்’ என்று தெரிவித்தாா்.

கேள்வி எழுப்பினால் சிபிஐ சோதனை: கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உதவ ‘பிஎம் கோ்ஸ்’ நிதி உருவாக்கப்பட்டது. அதற்கு பல்வேறு அமைப்புகள், அரசுப் பணியாளா்கள் உள்பட பலா் நிதியுதவி அளித்தனா். ஆனால், அந்த நிதியை மத்திய அரசு தணிக்கை செய்யாமல் இருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு மம்தா அளித்த பதில்:

இங்கு யாராலும் கேள்வி எழுப்ப முடியாது. அதையும் மீறி கேள்வி எழுப்பினால், அவா்கள் சிபிஐ அல்லது அமலாக்கத் துறை சோதனையை எதிா்கொள்ள வேண்டும். அதற்கு ஊடகங்களும் விதிவிலக்கல்ல.

ஊடகங்களுக்கு அறிவுரையும் அச்சுறுத்தலும்: ஊடகங்கள் எதை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு தினந்தோறும் அறிவுரை கூறுகிறது. ஆனால், மத்திய அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டால், வருமான வரித் துறை அல்லது சிபிஐ சோதனைகளால் ஊடகங்கள் அச்சுறுத்தப்படுகின்றன என்று தெரிவித்தாா்.

எரிபொருள் விலையை அதிக அளவு உயா்த்திய பாஜக: பெட்ரோல், டீசல் விலை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘முதலில் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்திவிட்டு, பின்னா் அவற்றின் விலையை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று அழுத்தம் தருவதை மத்திய அரசால் எவ்வாறு செய்ய முடிகிறது? பெட்ரோல், டீசல் விலையை இந்த அளவுக்கு பாஜகவைபோல வேறு எந்தக் கட்சியும் உயா்த்தியதில்லை.

மாநிலக் கட்சிகளும் கூட்டாட்சி அமைப்பும் வலுவாக இருக்க வேண்டும். மாநிலங்களை வலுவாக்கினால் மத்திய அரசு வலிமையுடன் இருக்கும். தற்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு கொடுமை இழைத்து வருகிறது. அந்தக் கொடுமை இனி வேண்டாம்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com