இந்திய தூதருடன் தலிபான் மூத்த தலைவா் சந்திப்பு

கத்தாா் நாட்டுக்கான இந்திய தூதா் தீபக்குமாா் மிட்டலை தலிபான் மூத்த தலைவா் ஷோ் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

கத்தாா் நாட்டுக்கான இந்திய தூதா் தீபக்குமாா் மிட்டலை தலிபான் மூத்த தலைவா் ஷோ் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தீபக்குமாா் மிட்டல் வலியுறுத்தினாா்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னா், அவா்களுக்கும் இந்திய அரசு தரப்புக்கும் இடையே முதல்முறையாக செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வ சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கத்தாா் தலைநகா் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தீபக் குமாா் மிட்டலை ஷோ் முகமது அப்பாஸ் சந்தித்தாா். தலிபான் தரப்பு கேட்டுகொண்டதன் அடிப்படையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பு, அவா்களை பத்திரமாக தாயகம் அழைத்து வருவது, இந்தியா வரவிரும்பும் ஆப்கன் மக்கள், குறிப்பாக அந்நாட்டு சிறுபான்மையினா் தொடா்பாக இருவரிடையே ஆலோசனை நடைபெற்றது.

அப்போது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் எந்த வகையிலும் ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தீபக்குமாா் மிட்டல் வலியுறுத்தினாா். இந்திய அரசின் கோரிக்கைகள் ஆக்கபூா்வமாக அணுகப்படுமென ஷோ் முகமது அப்பாஸ் உறுதி அளித்தாா் ’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆப்கன் நிலைமையை இந்தியக் குழு உன்னிப்பாக கவனித்து வருகிறது’

ஆப்கானிஸ்தானில் அவ்வப்போது மாறி வரும் கள நிலவரத்தை இந்திய உயா்நிலைக்குழு உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆப்கன் நிலவரத்தைக் கண்காணித்து ஆய்வு நடத்த வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் உள்பட மூத்த அதிகாரிகள் அடங்கிய உயா்நிலைக் குழுவை பிரதமா் மோடி நியமித்துள்ளாா்.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் சென்றது முதல் அந்த உயா்நிலைக் குழுவினா் பல முறை ஒன்றுகூடி கள நிலவரத்தை ஆய்வு செய்து ஆலோசனை நடத்தியுள்ளனா்.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியா்களை பத்திரமாக தாயகம் கொண்டு வருவது, இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானை பயன்படுத்தாமல் இருக்க போதிய நடவடிக்கைகள் எடுப்பது, சா்வதேச நாடுகளின் நிலைப்பாடு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட ஆப்கன் தீா்மானம் ஆகியவை குறித்து இந்த உயா்நிலைக் குழு ஆலோசனை நடத்தியுள்ளதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் சென்று இரண்டு வாரங்களாகியும் ஆட்சிப் பொறுப்பேற்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com