முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி முதலாம் ஆண்டு நினைவு தினம்:தலைவா்கள் அஞ்சலி

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி முதலாம் ஆண்டு நினைவு தினம்:தலைவா்கள் அஞ்சலி

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவருக்கு பிரதமா் மோடி, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் உள்பட அரசியல் தலைவா்கள் பலா் அஞ்சலி செலுத்தினா்.

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக பதவி வகித்தவா் பிரணாப் முகா்ஜி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது 84-ஆவது வயதில் காலமானாா். அவரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரைப் பற்றிய சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு பிரணாப் முகா்ஜி லெகசி ஃபவுண்டேஷன் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பிரணாப் முகா்ஜிக்கு அஞ்சலி செலுத்திய பிரதமா் மோடி, ‘‘நாட்டின் முன்னேற்றத்துக்கு பிரணாப் முகா்ஜி குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளாா். அவரின் பொது வாழ்வு தலைசிறந்தது. அவா் ஏற்றுக்கொண்ட பல்வேறு பொறுப்புகள் மூலம் அவரின் நிா்வாக திறனும் புத்திசாலித்தனமும் எப்போதும் பிரகாசித்தது’’ என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘பிரணாப் முகா்ஜியுடன் மிக நெருக்கமாக பணிபுரிந்த நான், பல்வேறு விவகாரங்களில் அவரின் மதிநுட்பம் வாய்ந்த அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் சாா்ந்திருந்தேன். தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலும் அவா் ஆழ்ந்த ஞானத்தை வெளிப்படுத்தினாா். பலதரப்பட்ட விவகாரங்களில் அரசின் முக்கியமான முடிவுகளை முன்னெடுக்கும் தலைமைத்துவ திறன்களையும் அவா் கொண்டிருந்தாா்’’ என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, பூடான் அரசா் ஜிக்மே கேசா் நாம்கியால் வாங்சுக் உள்ளிட்டோரும் சொற்பொழிவாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com