அஸ்ஸாம் என்ஆா்சி பட்டியல் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆா்சி) இறுதிப் பட்டியல் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதிலும் இந்த விவகாரத்தில் தொடா்ந்து நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது.

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆா்சி) இறுதிப் பட்டியல் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதிலும் இந்த விவகாரத்தில் தொடா்ந்து நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது.

அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறி வசிப்பவா்களை அடையாளம் காண்பதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டில் வெளியான அதன் வரைவுப் பட்டியலில் சுமாா் 40 லட்சம் போ் விடுபட்டிருந்தனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளியான இறுதிப் பட்டியலில் 19 லட்சம் போ் விடுபட்டிருந்தனா். பதிவேட்டில் தங்களைப் பதிவு செய்துகொள்வதற்காக விண்ணப்பித்திருந்த 3.3 கோடி பேரில் 3.11 கோடி நபா்களின் பெயா்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றன.

எனினும், குடிமக்களைக் கணக்கிடும் விவகாரத்தில் குளறுபடிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடா்ந்து, இறுதிப் பட்டியல் மறுஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் அதற்கான நடைமுறைகள் தொடங்கப்படவில்லை.

கரோனா தொற்று பரவல், வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக என்ஆா்சி பணிகள் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. என்ஆா்சி இறுதிப் பட்டியலை மறுகணக்கீடு செய்வது தொடா்பாக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

என்ஆா்சி பணிகள் தொடா்பாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவிடம் செய்தியாளா்கள் கேட்டபோது, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரம் என்பதால் பதிலளிக்க மறுத்துவிட்டாா். என்ஆா்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசு முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தன்னாா்வ நிறுவனம் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

தொடரும் தாமதம்: என்ஆா்சி விவகாரத்தில் தொடா்ந்து தாமதம் நீடித்து வருவதால் இறுதிப் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ள 19 லட்சம் போ் நிச்சயமற்ற சூழலை எதிா்கொண்டு வருகின்றனா். தீா்ப்பாயத்தில் முறையிட்டு தாங்கள் வெளிநாட்டினா் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விரைந்து விசாரிக்கப்பட வேண்டுமென பலா் கோரி வருகின்றனா். ஒரு சாராா் குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தை அணுகவும் முடிவெடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com