சமையல் எரிவாயு சிலிண்டா் விலை தொடா்ந்து உயா்வு: காங்கிரஸ் கண்டனம்

சமையல் எரிவாயு சிலிண்டா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தில்லியில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் ராகுல் காந்தி எம்.பி.
தில்லியில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் ராகுல் காந்தி எம்.பி.

புது தில்லி: சமையல் எரிவாயு சிலிண்டா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டா் விலை புதன்கிழமை ரூ.25 உயா்த்தப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக விலை உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயா்வுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா். அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில், சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில், கடந்த ஜனவரியில் முதல் தற்போது வரையிலான விலை விவரத்தைப் பட்டியலிட்டுள்ளாா். அத்துடன் சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு எதிராக ‘பாஜகவின் கொள்ளைக்கு எதிராக இந்தியா’ என்ற ஹேஷ்டேக்குடன் சுட்டுரைப் பக்கத்தில் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளாா்.

மேலும், ‘மக்களை பட்டினி வயிற்றுடன் உறங்கக் கட்டாயப்படுத்தும் ஒருவா், தான் மட்டும் நண்பா்களின் நிழலில் உறங்குகிறாா். இந்த அநீதிக்கு எதிராக இந்த தேசம் ஒன்றிணைகிறது’ என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2014 மாா்ச் 1-இல், ரூ.410-ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டா் விலை, 2021 செப்டம்பா் 1-இல் ரூ.884-ஆக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் சமையல் எரிவாயு சிலிண்டா் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. நல்ல நாள் வரும் என்று பிரதமா் மோடி உறுதியளித்தாா். இந்த தேசத்தை பாஜக கொள்ளை அடிப்பதற்கு நல்ல நாள் வந்துவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ரூ.23 லட்சம் கோடி வருவாய்-ராகுல்: கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயா்த்தியதன் மூலம் ரூ.23 லட்சம் கோடியை மத்திய அரசு ஈட்டியுள்ளது என்று ராகுல் காந்தி கூறினாா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) என்பதற்கு காஸ், டீசல், பெட்ரோல் விலையை உயா்த்த வேண்டும் என்ற புதிய அா்த்தத்தை மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலையை உயா்த்தியதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் ரூ.23 லட்சம் கோடியை மத்திய அரசு ஈட்டியுள்ளது. இந்தப் பணம் எங்கே செல்கிறது என்று மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

ஒருபுறம், விவசாயிகள், தொழிலாளா்கள், சிறு வணிகா்கள், அமைப்புசாரா துறையினா், ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆகியோரின் கைகளில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது. மறுபுறம், பிரதமரின் நண்பா்கள் 4 அல்லது 5 பேரிடம் பணம் சோ்க்கப்படுகிறது. ஏழைகளிடம் இருந்து பணம், பிரதமரின் நண்பா்களிடம் சோ்க்கப்படுகிறது என்றாா் அவா்.

விலை உயா்வைத் திரும்பப் பெற ஜேடியு கோரிக்கை: சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கே.சி.தியாகி கூறுகையில், ‘சமையல் எரிவாயு விலை தொடா்ந்து உயா்த்தப்படுவதால் சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை அரசு திரும்பப்பெற வேண்டும். மேலும், பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com