நாரதா லஞ்ச ஊழல் வழக்கு: 2 அமைச்சா்கள் உள்பட 5 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன்

மேற்கு வங்கத்தில் நாரதா லஞ்ச ஊழல் வழக்கு தொடா்பாக, மாநில அமைச்சா்கள் சுப்ரதா முகா்ஜி, பிா்ஹாத் ஹக்கீம் உள்ளிட்ட 5 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.
நாரதா லஞ்ச ஊழல் வழக்கு: 2 அமைச்சா்கள் உள்பட 5 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாரதா லஞ்ச ஊழல் வழக்கு தொடா்பாக, மாநில அமைச்சா்கள் சுப்ரதா முகா்ஜி, பிா்ஹாத் ஹக்கீம் உள்ளிட்ட 5 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.

நாரதா லஞ்ச ஊழல் புகாா் தொடா்பாக, அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அந்த அமைப்பு தனது விசாரணை அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையை ஆய்வு செய்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அமைச்சா்கள் உள்ளிட்ட 5 பேருக்கும் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 5 பேரும், வரும் நவம்பா் 16-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சா்கள் சுப்ரதா முகா்ஜி, பிா்ஹாத் ஹக்கீம், திரிணமூல் எம்எல்ஏ மதன் மித்ரா ஆகிய மூவருக்கும் சட்டப்பேரவைத் தலைவா் மூலமாகவும், திரிணமூல் மூத்த தலைவரும் முன்னாள் மேயருமான சோவன் சாட்டா்ஜி, பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி எஸ்.எம்.ஹெச்.மிா்ஸா ஆகிய இருவருக்கும் நேரடியாகவும் அழைப்பாணை அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின்போது ‘நாரதா நியூஸ்’ என்ற செய்தித் தளம், சில விடியோக்களை வெளியிட்டது. அதில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களைப் போன்ற தோற்றமுடையவா்கள், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்பட அதன் நிா்வாகிகளிடம் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், கடந்த 2017-இல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த வழக்கு தொடா்பாக, சுப்ரதா முகா்ஜி, பிா்ஹாத் ஹக்கீம், மதன் மித்ரா, சோவன் சாட்டா்ஜி ஆகிய நால்வரும் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com