தில்லியில் கொட்டித் தீர்க்கும் மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின 

தேசிய தலைநகர் தில்லியில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழையால் போக்குவரத்து பாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கொட்டித் தீர்க்கும் மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின 


புது தில்லி: தேசிய தலைநகர் தில்லியில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழையால் போக்குவரத்து பாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தில்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதலே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த மழையின் காரணமாக ஆசாத் மார்க்கெட் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருப்பதாக தில்லி போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

பலத்த மழை காரணமாக நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஐடிஓ, ஐ.பி. மேம்பாலம் அருகே உள்ள ரிங் ரோடு, தௌலகுவான், ரோத்தக் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. பாலம் அருகே உள்ள சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

தில்லியைச் சேர்ந்த மோஹித் என்பவர், தான் வேலைக்கு செல்வதற்காக பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​"ஒரு மணி நேரத்திற்கு முன்பு எனது கார் செயல்படாமல் நின்றதால் பாதாளச் சாலையில் சிக்கிக்கொண்டது. 

சிறிது நேரத்திற்கு முன்பு வந்த போக்குவரத்து பணியாளர் ஒருவர், தனது காரை எடுப்பதற்கு கிரேன் அனுப்புவதாக கூறிவிட்டுச் சென்றார். எனினும், நான் இன்னும் காத்திருக்கிறேன்," கிரேன் வரவில்லை என்று கூறியுள்ளார். 

சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளதால் இரு சக்கர வாகனம் பல முறை நின்றுவடுவதாக வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர். 

இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்த இந்திய வானிலை ஆய்வு மையம்,  தற்போது பெய்து வரும் மழை அடுத்த இரண்டு மணி நேரத்தில் நிற்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிக்கையின் படி, ஆகஸ்ட் 31, காலை 8.30 முதல் செப்டம்பர் 1 வரை, தில்லியின் சஃப்தர்ஜங்கில் காலை 8.30 மணி வரை 112.1 மிமீ. மழை பதிவாகியுள்ளது. பாலத்தில் 71.1 மிமீ, லோடி சாலையில் 120.2 மிமீ, ரிட்ஜ் 81.6 மிமீ மழை பதிவாகியது. 

இதற்கு முன்பு கடந்த 2002, செப்டம்பர் 13-இல் தில்லியில் 126.8 மி.மீ. மழை பதிவானது. அதற்கு முன்பு 1963, செப்டம்பர் 16-இல் 172.6 மி.மீ. மழை பதிவானது. குறைந்தபட்சம் 19 ஆண்டுகளில் ஒரே நாளில் செப்டம்பர் மாதத்தில் பெய்த அதிகபட்ச மழை பதிவு இதுவாகும்' என்று தெரிவித்துள்ளது.

தில்லியில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக, இடைவிடாது பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com