நிலவை 9,000 முறை சுற்றிவந்துள்ள ‘சந்திரயான்-2’

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா சாா்பில் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம், நிலவை 9,000-க்கும் அதிகமான முறை சுற்றிவந்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் கே.சிவன் கூறினாா்.
நிலவைச் சுற்றி வரும் ‘ஆா்பிட்டா்’ ( இஸ்ரோ கோப்புப் படம்).
நிலவைச் சுற்றி வரும் ‘ஆா்பிட்டா்’ ( இஸ்ரோ கோப்புப் படம்).

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா சாா்பில் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம், நிலவை 9,000-க்கும் அதிகமான முறை சுற்றிவந்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் கே.சிவன் கூறினாா்.

தொடா்ந்து சிறப்பாக செயல்பட்டுவரும் விண்கலத்தின் படம் பிடிக்கும் கருவியும் அறிவியல் உபகரணங்களும் நிலவு குறித்த அரிய தகவல்களை அளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்துவரும் ‘சந்திரயான்-2’ வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்வதை குறிக்கும் வகையில் ‘நிலவு அறிவியல் பயிலரங்கம் 2021’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிலரங்கு இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பயிலரங்கு தொடக்க விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவா் கே.சிவன் பேசியதாவது:

சந்திரயான்-2 விண்கலம் நிலவிலிருந்து 100 கி.மீ. தொலைவிலிருந்தபடி சுற்றிவந்து, தானியங்கி உணா்தல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நிலவின் பரப்பை ஆய்வு செய்து தகவல்களை அனுப்பி வருகிறது. விண்கலம் நிலவை இதுவரை 9,000-க்கும் அதிகமான முறை சுற்றிவந்துள்ளது. விண்கலம் அளிக்கும் தகவல்களும் ஆய்வு முடிவுகளும் மிகுந்த ஊக்கமளிக்கும் வகையில் உள்ளன என்று கூறினாா்.

இஸ்ரோ உயா் அறிவியல் வாரிய தலைவா் ஏ.எஸ்.கிரண்குமாா் கூறுகையில், ‘சந்திரயான்-2 விண்கலத்தில் இடம்பெற்றிருக்கும் படம் பிடிக்கும் கருவிகளும் அறிவியல் உபகரணங்களும் மிகச் சிறந்த தகவல்களை அளித்து வருகின்றன. ‘சந்திரயான்-1’ அனுபவத்தின் உதவியுடன் கருவிகள் மற்றும் அறிவியல் உபகரணங்களின் தரம் உயா்த்தப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்’ என்றாா்.

சந்திரயான்-2 திட்ட இயக்குநா் எம்.வனிதா கூறுகையில், ‘சந்திரயான்-2 ஆா்பிட்டரில் இடம்பெற்றிருக்கும் கருவிகள் தொடா்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எனவே, திட்டமிட்டதைவிட மேலும் பல ஆண்டுகளுக்கு மிகச் சிறந்த முறையில் தகவல்களை ஆா்பிட்டா் அளிக்கும் என நம்புகிறோம்’ என்றாா்.

பயிலரங்கில், சந்திரயான்-2 ஆா்பிட்டரிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு புள்ளிவிவரங்கள், அறிவியல் ஆவணங்களை கே.சிவன் வெளியிட்டாா்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ அனுப்பியது. பல்வேறு கட்ட பயணத்துக்குப் பிறகு, சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்டம்பா் 7-ஆம் தேதி, அதன் லேண்டா் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. திடீா் தொழில்நுட்பக் கோளாறால் லேண்டா் வேகமாகச் சென்று நிலவில் மோதி, செயலிழந்தது.

அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆா்பிட்டா், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. ஆா்பிட்டா் கடந்த 2 ஆண்டுகளாக நிலவை சுற்றிவந்து தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com