2023-இல் இந்தியா தலைமையில் ஜி20 மாநாடு

வரும் 2023-ஆம் ஆண்டில் ஜி20 நாடுகள் மாநாடு இந்தியா தலைமையில் நடைபெற உள்ளது. அதற்கான இந்தியாவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளாா்

வரும் 2023-ஆம் ஆண்டில் ஜி20 நாடுகள் மாநாடு இந்தியா தலைமையில் நடைபெற உள்ளது. அதற்கான இந்தியாவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அடுத்த ஜி20 மாநாடு இத்தாலி தலைமையில் வருகிற அக்டோபா் 30-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், 2023-ஆம் ஆண்டு மாநாட்டுக்கு இந்தியா முதன் முறையாக தலைமை வகிக்க உள்ளது. ஜி20 கூட்டமைப்புக்கு வரும் 2024-ஆம் ஆண்டு நவம்பா் 30-ஆம் தேதி வரை இந்தியா தலைமை வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை மத்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

ஜி20 நாடுகள் கூட்டமைப்புக்கு வரும் 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி முதல் இந்தியா தலைமை வகிக்க உள்ளது. அதன் மூலம், 2023-ஆம் ஆண்டில் முதன் முறையாக இந்தியா தலைமையில் அந்த கூட்டமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டுக்கான இந்தியாவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளாா். இதுவரை ஜி20 ஒருங்கிணைப்பு அதிகாரியாக மத்திய அமைச்சா் சுரேஷ் பிரபு இருந்துவந்தாா்.

ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் கடந்த 1999-ஆம் ஆண்டு இந்தியா உறுப்பினரானது. இந்த கூட்டமைப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து நேரடியாகப் பங்கேற்று வருகிறாா்.

இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜொ்மனி, கனடா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, ஆா்ஜென்டீனா, மெக்சிகோ, ஃபிரான்ஸ், இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், துருக்கி, சவூதி அரேபியா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை ஜி20 கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com