ஈரோட்டிலிருந்து தாராபுரம் வழியாக பழனிக்கு புதிய அகல ரயில் பாதை: ரயில்வே அமைச்சரிடம் எல்.முருகன் வலியுறுத்தல்

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனிக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு
ஈரோட்டிலிருந்து தாராபுரம் வழியாக பழனிக்கு புதிய அகல ரயில் பாதை: ரயில்வே அமைச்சரிடம் எல்.முருகன் வலியுறுத்தல்

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனிக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவிடம், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
 ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனியை இணைக்கும் ரயில் பாதைத் திட்டத்தைச் செயல்படுத்த ஆங்கிலேயர் ஆட்சியில் (1915-ஆம் ஆண்டு) முடிவு எடுக்கப்பட்டு அதற்கான சர்வேயும் அப்போதே எடுக்கப்பட்டது. இறுதியாக 2006-07-ஆம் நிதியாண்டில் ரூ.289 கோடி மதிப்பீட்டில் ஈரோடு- பழனி புதிய அகல ரயில் பாதைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் இதுவரை தொடங்கப்படாத நிலையில், திட்டத்தின் மதிப்பு ரூ. 1,140 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது.
 இந்த நிலையில், இதுதொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
 அப்போது, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தினார். ஈரோடு, திண்டுக்கல் மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அந்தப் பகுதியின் விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அகல ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கையாகும் என்று ரயில்வே அமைச்சரிடம் அவர் தெரிவித்தார்.
 மேலும், காசி விஸ்வநாதரை தரிசித்த பின்னர் பக்தர்கள் புத்த கயைக்கும், ராமேசுவரத்துக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால், வாராணசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு ரயிலை இயக்க வேண்டும் எனவும் அமைச்சரிடம் முருகன் கேட்டுக் கொண்டார். இது பாரம்பரிய நகரமான காஞ்சிபுரத்தை, ராமாயணம் சுற்றுலா இணைப்புப் பாதையோடு இணைக்க உதவும். மேலும், உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் என்று எடுத்துரைத்தார்.
 இதை ஏற்றுக்கொண்ட மத்திய ரயில்வே துறை அமைச்சர் இரு திட்டங்களோடு தமிழ்நாட்டின் மற்ற ரயில்வே வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்தத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக முருகனிடம் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com