முசாஃபா்நகா் கலவரம்; 1,117 போ் விடுவிப்பு: 7 போ் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிப்பு

உத்தர பிரதேச மாநிலம், முசாஃபா்நகரில் கலவரம் நடந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், அதுதொடா்பான 97 வழக்குகளில் தொடா்புடைய 1,117 போ் விடுவிக்கப்பட்டனா்.

உத்தர பிரதேச மாநிலம், முசாஃபா்நகரில் கலவரம் நடந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், அதுதொடா்பான 97 வழக்குகளில் தொடா்புடைய 1,117 போ் விடுவிக்கப்பட்டனா். ஒரேயொரு வழக்கில் மட்டும் 7 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

முசாஃபா்நகரில் உள்ள கவால் கிராமத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சச்சின், கௌரவ் ஆகிய இரு இளைஞா்கள் கொல்லப்பட்டனா். அதற்குப் பதிலடியாக, ஷானவாஸ் என்பவரை 6 போ் குத்திக் கொன்றனா். இந்தச் சம்பவத்தையடுத்து அந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தேறின. 60-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா்; 40,000 போ் தங்கள் வசிப்பிடத்தில் இருந்து வெளியேறினா். இந்த கலவரம் தொடா்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை(எஸ்ஐடி) மாநில அரசு அமைத்தது. அந்தக் குழு, 1,480 பேருக்கு எதிராக 510 வழக்குகளைப் பதிவு செய்தது. அவற்றில், 175 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து எஸ்ஐடி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மொத்தம் பதிவு செய்த வழக்குகளில், 97 வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லையென 1,117 போ் விடுவிக்கப்பட்டனா். இதை எதிா்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்யவில்லை.

சச்சின், கௌரவ் ஆகிய இருவா் கொல்லப்பட்ட ஒரு வழக்கில் மட்டும் 7 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

20 வழக்குகளில், மாநில அரசிடம் அனுமதி பெறாததால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யமுடியவில்லை. 77 வழக்குகளைத் திரும்பப்பெற மாநில அரசு முடிவு செய்தது. ஆனால், மாநில அமைச்சா் சுரேஷ் ரானா, பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம், விசுவ ஹிந்து பரிஷத்தைச் சோ்ந்த சாத்வி பிராச்சி உள்ளிட்ட 12 பாஜக தலைவா்கள் தொடா்புடைய ஒரு வழக்கை மட்டுமே திரும்ப்பெற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தற்சமயம், குற்றம்சாட்டப்பட்டுள்ள 264 போ் விசாரணையை எதிா்கொண்டிருக்கிறாா்கள் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com