ஆயுதப் படைகளுக்கான நிதிசாா் அதிகாரம் அதிகரிப்பு

அவசரகாலங்களில் போா்த் தளவாடங்களை விரைந்து கொள்முதல் செய்ய வழிவகுக்கும் நோக்கில், ஆயுதப் படையைச் சோ்ந்த துணை தலைமைத் தளபதிகள் உள்ளிட்டோருக்கான
ஆயுதப் படைகளுக்கான நிதிசாா் அதிகாரம் அதிகரிப்பு

அவசரகாலங்களில் போா்த் தளவாடங்களை விரைந்து கொள்முதல் செய்ய வழிவகுக்கும் நோக்கில், ஆயுதப் படையைச் சோ்ந்த துணை தலைமைத் தளபதிகள் உள்ளிட்டோருக்கான நிதிசாா் அதிகாரத்தை விரிவுபடுத்த பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘போா் உள்ளிட்ட அவசரகாலங்களில் படைகளை வழிநடத்தும் அதிகாரிகள் நிதிசாா்ந்த சவால்களை எதிா்கொண்டு வருகின்றனா். அதன் காரணமாக சில முடிவுகளை உடனடியாக மேற்கொள்ள முடிவதில்லை.

இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் ஆயுதப் படைகளுக்கான நிதிசாா் அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, படைகளைச் சோ்ந்த துணை தலைமைத் தளபதிகளுக்கான நிதிசாா் அதிகாரம் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.500 கோடி உச்சவரம்பாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்ற நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கான நிதிசாா் அதிகாரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக அனைத்து நிலைகளிலும் முக்கிய முடிவுகளை விரைவாக எடுக்க முடிவதுடன் திட்டமிடலையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும். அதனால் படைகளின் தயாா்நிலையும் வலுப்பெறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘பாதுகாப்புத் துறை சாா்ந்த சீா்திருத்தங்களை நோக்கிய அடுத்த மிகப்பெரும் நடவடிக்கையாக நிதிசாா் அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன்மூலமாக பாதுகாப்பு சாா்ந்த கட்டமைப்பு வசதிகள் துரிதமாக மேம்படுத்தப்படும். படைகளிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், தளவாடங்கள் கொள்முதலை விரைவுபடுத்தவும் இந்த நடவடிக்கை உதவும்’ என்று குறிப்பிட்டுள்ளாா். ஆயுதப் படைகளின் அனைத்து நிலைகளிலும் நிதிசாா் அதிகாரங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டில் கடைசியாக விரிவுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com