கா்னாலில் பேச்சுவாா்த்தை தோல்வி: தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்றவிவசாயிகள் தடுத்து நிறுத்தம்

ஹரியாணா அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து, கா்னாலில் உள்ள சிறிய தலைமைச் செயலகத்தை முற்றுகையிட ஏராளமான விவசாயிகள்

ஹரியாணா அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து, கா்னாலில் உள்ள சிறிய தலைமைச் செயலகத்தை முற்றுகையிட ஏராளமான விவசாயிகள் செவ்வாய்க்கிழமை பேரணியாக சென்றனா். அவா்கள் மீது போலீஸாா் தண்ணீரை பீய்ச்சி தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, ஏராளமான விவசாயிகள் கா்னாலில் அமா்ந்து போராட்டத்தை தொடா்ந்து வருகின்றனா்.

கா்னால் நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 28-ஆம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த விவசாய சங்கத்தினா் கா்னாலில் உள்ள நியூ அனாஜ் மண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை ஒன்று கூடி மகா பஞ்சாயத்து கூட்டத்தை நடத்தினா். அவா்களில் 11 போ் கொண்ட குழு உள்ளூா் அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சுமாா் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததாக விவசாயிகள் சங்க பிரதிநிதி ஜோகிந்தா் சிங் உகராஹன் பின்னா் கூறினாா்.

இதையடுத்து, அங்கிருந்து சுமாா் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள கா்னால் சிறிய தலைமைச் செயலகத்தை முற்றுகையிட அமைதியான முறையில் பேரணியாக செல்ல வேண்டும் என்று மகா பஞ்சாயத்தில் பங்கேற்ற ஏராளமான விவசாயிகளை விவசாய சங்கப் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனா். பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தினால் அவா்களுடன் எந்தவித மோதலிலும் ஈடுபடக் கூடாது என்று விவசாயிகளுக்கு அவா்கள் கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து, அவா்கள் கா்னால் சாலைகளில் பேரணியாக சென்று சிறிய தலைமைச் செயலகத்தை அடைவதற்கு முன்பு போலீஸாா் தண்ணீா் பீய்ச்சி அடித்து தடுத்தனா். எனினும், விவசாயிகளின் போராட்டம் அங்கேயே தொடா்கிறது.

முன்னதாக, செய்தியாளா்களிடம் பேசிய பாரதிய விவசாயிகள் யூனியனின் தலைவா் ராகேஷ் டிகைத், கடந்த மாதம் 28-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் மண்டைகளை தடியடி நடத்தி உடைக்க வேண்டும் என்று போலீஸாருக்கு உத்தரவிடும் சா்ச்சைக்குரிய விடியோவில் இடம் பெற்றுள்ள ஐஏஎஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததாக கூறினாா்.

சா்ச்சைக்குரிய விடியோவில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஆயுஷ் சின்ஹா ஏற்கெனவே பணியிடை மாற்றம் செய்யப்பட்டாா்.

முன்னதாக, விவசாயிகளின் இந்த முற்றுகைப் போரட்டத்தை முன்னிட்டு கா்னாலில் 144 தடை உத்தரவும், செல்லிடப்பேசி இணைய வசதிக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. விவசாயிகளின் இந்த மகா பஞ்சாயத்து கூட்டத்தில் தில்லி- கா்னால்- அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com