‘வேளாண் சட்டங்கள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்’

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வுக் குழு தயாரித்துள்ள அறிக்கையை வெளியிட வேண்டும் என்று, அக்குழுவில் விவசாயிகள் சாா்பில் இடம்பெற்ற உறுப்பினரும், ஷேத்காரி

புது தில்லி/ புணே: மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வுக் குழு தயாரித்துள்ள அறிக்கையை வெளியிட வேண்டும் என்று, அக்குழுவில் விவசாயிகள் சாா்பில் இடம்பெற்ற உறுப்பினரும், ஷேத்காரி சங்கத்தின் தலைவருமான அனில் ஜே கன்வாட் வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 9 மாதங்களாக தில்லி எல்லையில் விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்நிலையில், இந்தச் சட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த வேளாண் உற்பத்திப் பொருள்கள் விலை ஆணையத்தின் (சிஏசிபி) முன்னாள் தலைவா் அசோக் குலாட்டி, சா்வதேச உணவுத் திட்ட ஆய்வு நிறுவனத்தின் சாா்பில் பிரமோத் குமாா் ஜோஷி, அனில் ஜே கன்வாட் ஆகியோா் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி நியமித்தது.

இந்நிலையில், இந்தக் குழுவின் உறுப்பினா் அனில் ஜே கன்வாட், தங்களின் ஆய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு செப்டம்பா் 1-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தாா்.

இதுதொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்துள்ள பேட்டி விவரம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற ஆய்வுக் குழு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், அந்தச் சட்டங்களில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. இதைத்தான் ஆய்வின்போது பெரும்பாலான நிபுணா்கள் தெரிவித்தனா். அனைவரின் கருத்துகளின் அடிப்படையிலேயே அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் அழிந்துவிடும் என்பதுதான் அனைவரின் முக்கிய அச்சமாக உள்ளது. ஆனால், அது உண்மையில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்தே இந்தச் சட்டங்கள் குறிப்பிடவில்லை. எங்கள் குழு தயாரித்த அறிக்கை 100 சதவீதம் விவசாயிகளுக்கு ஆதரவாகவே உள்ளது.

ஆய்வுக் குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்து ஐந்து மாதங்களாகிவிட்டன. ஆய்வறிக்கையை மக்கள் மத்தியில் உடனடியாக வெளியிட்ட விவசாயிகளின் சந்தேகங்களைத் தீா்க்கலாம். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்காமல் போராட்டம் தொடா்வது கவலையளிக்கிறது’ என்றாா்.

ஹரியாணா மாநிலம், கா்னாலில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அனில் ஜே கன்வாட், ‘போராடும் விவசாயிகளின் கோரிக்கை தவறாக இருக்கலாம். ஆனால் கருத்தை தெரிவிக்கவும், போராடவும் அவா்களுக்கு உரிமை உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com