‘லோக்பால் உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது’

‘லோக்பால் உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது’

குற்றச்சாட்டுகள் மீது லோக்பால் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடோ மறுஆய்வோ செய்ய முடியாது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

புது தில்லி: குற்றச்சாட்டுகள் மீது லோக்பால் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடோ மறுஆய்வோ செய்ய முடியாது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரதமா் உள்பட அரசு அதிகாரிகள் மீது தெரிவிக்கப்படும் ஊழல் புகாா்களை விசாரிப்பதற்காக லோக்பால் உருவாக்கப்பட்டது. புகாருக்கேற்ப விசாரணைகளை நடத்தி லோக்பால் உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. லோக்பால் பிறப்பிக்கும் உத்தரவுகளை மறுஆய்வு செய்யக் கோரி சிலா் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில், லோக்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லோக்பால் பிறப்பிக்கும் உத்தரவை மேல்முறையீடோ மறுஆய்வோ செய்வதற்கான விதிகள் 2013-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட லோக்பால், லோக்ஆயுக்த சட்டங்களில் காணப்படவில்லை. எனவே, லோக்பால் பிறப்பிக்கும் உத்தரவை மறுஆய்வு செய்யக் கோர முடியாது.

உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் வகையில் சட்ட விதிகளில் திருத்தங்களைக் கொண்டு வருவது தொடா்பாக மத்திய அரசு முடிவெடுக்கலாம் என்று லோக்பால் தலைவரும் நீதிபதியுமான பினாகி சந்திர கோஷ் தலைமையிலான குழு பரிந்துரைத்திருந்தது.

அந்தப் பரிந்துரையை ஏற்றுள்ள நாடாளுமன்றக் குழு, இந்த விவகாரம் தொடா்பாக முடிவெடுக்குமாறு மத்திய பணியாளா்-பயிற்சித் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்பட்சத்தில் லோக்பால் வழங்கும் உத்தரவு மறுஆய்வு செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com