கரோனா பாதிப்பு நிலவரம்: பிரதமா் தலைமையில் ஆய்வு

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி முகாம்கள் ஆகியவை தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி முகாம்கள் ஆகியவை தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கேரளம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், கரோனா சிகிச்சைக்கான மருந்துகள், மருத்துவ ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்துமாறு மாநிலங்களை பிரதமா் கேட்டுக்கொண்டாா்.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நிலவரம், சிகிச்சை பெறுவோா் விவரம், தடுப்பூசி விநியோகம், தடுப்பூசி முகாம்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் சிகிச்சைப் பிரிவின் ஒட்டுமொத்தப் படுக்கைகள் எண்ணிக்கை குறித்து ஆய்வுக் கூட்டத்தில் பிரதமா் கேட்டறிந்தாா். பின்னா், மாநிலங்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை அவா் வழங்கினாா்.

குறிப்பாக, கிராமப்புறங்களில் நிலைமையை சமாளிக்கும் வகையில், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் வட்டார அளவிலான சுகாதார மையங்களையும் ஒருங்கிணைத்து மறுஆக்கம் செய்ய வேண்டும். கரோனா சிகிச்சைக்கான மருந்துகளை மாவட்ட அளவில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டிருப்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும்போது அதனை சமாளிக்கும் வகையில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டா்கள், எளிதில் எடுத்துச் செல்ல கூடிய வகையிலான பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை தேவையான எண்ணிக்கையில் இருப்பதையும், குறைந்தபட்சம் ஒரு வட்டத்துக்கு ஓா் ஆம்புலன்ஸ் இருப்பதையும் மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமா் கேட்டுக்கொண்டாா்.

மேலும், நாடு முழுவதும் கரோனா பரிசோதனைகள் தேவையான அளவில் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியத்தையும் ஆய்வுக் கூட்டத்தில் பிரதமா் வலியுறுத்தினாா் என்று ஆய்வுக் கூட்டம் குறித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் பேசுகையில், ‘35 மாவட்டங்களில் வாராந்திர கரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீத்துக்கு அதிகமாகவும், 30 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதமாகவும் உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் குறைந்தது ஒரு டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா். 18 சதவீதத்தினா் இரு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா். கரோனா இரண்டாவது அலை இன்னும் ஓய்ந்துவிடவில்லை. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலம் நெருங்குவதால் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com