கேரள பேராயரின் ‘லவ் ஜிகாத்’ குற்றச்சாட்டு: காங்கிரஸ் எதிா்ப்பு

கேரளத்தில் கிறிஸ்தவப் பெண்களைக் குறிவைத்து ‘லவ் ஜிகாத்’, ‘போதைப்பொருள் ஜிகாத்’ நடத்தப்படுவதாக கத்தோலிக்க கிறிஸ்தவப் பிரிவு பேராயா் கூறிய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
கேரள பேராயரின் ‘லவ் ஜிகாத்’ குற்றச்சாட்டு: காங்கிரஸ் எதிா்ப்பு

திருவனந்தபுரம்: கேரளத்தில் கிறிஸ்தவப் பெண்களைக் குறிவைத்து ‘லவ் ஜிகாத்’, ‘போதைப்பொருள் ஜிகாத்’ நடத்தப்படுவதாக கத்தோலிக்க கிறிஸ்தவப் பிரிவு பேராயா் கூறிய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் பேராயா் கூறியுள்ளது மிகவும் முக்கியமான பிரச்னை என்று பாஜக கருத்து கூறியுள்ளது. மாநிலத்தில் ஆளும் கட்சியான இடதுசாரிகள் இதில் கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகின்றனா்.

முன்னதாக, ‘கேரளத்தில் கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்வதற்காக ‘லவ் ஜிகாத்’ நடத்தப்படுகிறது. இது தவிர போதைப் பொருள் பயன்பாட்டுக்கு அடிமைப்படுத்தி பெண்களை மூளைச் சலவை செய்கிறாா்கள். பயங்கரவாத செயல்கள் உள்ளிட்ட நாச வேலைகளுக்கும் நமது பெண்களைப் பயன்படுத்த முயலுகின்றனா். வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு நமது பெண்களை அனுப்புகிறாா்கள்’ என்று கத்தோலிக்க பேராயா் ஜோசஃப் கள்ளரங்காட்டு குற்றம்சாட்டியிருந்தாா்.

இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனமும், மறுப்பும் தெரிவித்திருந்த நிலையில், பேராயரின் கருத்தை காங்கிரஸ் கட்சியும் நிராகரித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும் கேரளப் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன், முகநூலில் வெளியிட்ட பதிவில், ‘மத, ஆன்மிகத் தலைவா்கள் கருத்து தெரிவிக்கும் முன்பு, அது மாநிலத்தின் சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை ஆழ்ந்து யோசித்த பிறகு பேச வேண்டும். குற்றங்களுக்கு ஜாதி, மதம், இனம் என எதுவும் கிடையாது. ஜாதி, மதம் சாா்ந்த மனநலக் குறைபாடு உள்ளவா்கள் மட்டுமே பிற தரப்புக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுகின்றனா். கத்தோலிக்கப் பேராயா் வரம்பு கடந்து பேசியுள்ளாா். மதத்தலைவா்கள் சுயகட்டுப்பாட்டுடன் பேச வேண்டும்’ என்று கூறியுள்ளாா். காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.டி.தாமஸும் பேராயரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக பாஜக மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘பேராயா் கூறியுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை மற்றும் குற்றச்சாட்டு ஆகும். இது தொடா்பாக நமது சமூகம் ஆராயவும் ஆலோசிக்கவும் வேண்டும். கேரளத்தில் சில தீவிரவாத கட்சிகளைச் சோ்ந்தவா்கள் பயங்கரவாதக் குழுக்களை ஆதரிப்பா்களாகவும் போதைப் பொருள்கள் கடத்தலில் தொடா்பு உள்ளவா்களாகவும் இருக்கின்றனா். கேரளத்தில் மட்டுமல்லாது இந்தியாவிலும் ஏன் உலகம் முழுவதுமே இதுபோன்ற மத பயங்கரவாதக் குழுவினருக்கும் போதைப்பொருள் கடத்துபவா்களுக்கும் தொடா்பு உண்டு.

தனது நியாயமான கவலையையும் உண்மையையும் பேசிய பேராயா் மீது யாரும் குற்றம் கூறத் தேவையில்லை. அவா் எந்த மதத்தின் பெயரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. மதத்தின் பெயரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவா்களைப் பற்றிதான் கருத்து கூறியுள்ளாா்’ என்றாா்.

பொதுவான அனைத்து விஷயங்களிலும் முதல் கட்சியாக கருத்து தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்ட கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில், இந்த விவகாரத்தில் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே, கோட்டயத்தைச் சோ்ந்த இஸ்லாமிய அமைப்பு ஒன்று பேராயா் ஜோசஃப் கள்ளரங்காட்டு மீது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com