தடுப்பூசி விவரங்கள் அறிய புதிய செயலி

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் விவரங்களை அறிய புதிய செயலியை கோவின் தொடங்க இருக்கிறது.
தடுப்பூசி விவரங்கள் அறிய புதிய செயலி

புது தில்லி: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் விவரங்களை அறிய புதிய செயலியை கோவின் தொடங்க இருக்கிறது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடக்கிவைத்தாா். இதுவரை 72 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தை வழங்க, ஒவ்வொரு தனிநபருக்கும் கோவின் வலைதளம் ஏற்கெனவே எண்மய (டிஜிட்டல்) சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

இந்தச் சான்றிதழை அறிதிறன்பேசிகள், மடிக்கணினி, டேப்லெட் அல்லது டிஜி லாக்கரில் சேமிக்க முடியும். தேவைப்படும்போது தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரமாக காட்ட முடியும். இந்தச் சான்றிதழ் தேவைப்படும் நுழைவிடங்களான வணிக வளாகங்கள், அலுவலக வளாகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இந்தச் சான்றிதழ்களை காகித வடிவிலும் மென்வடிவிலும் காண்பிக்கலாம்.

முன்பதிவு செய்யும் பயணிகளின் தடுப்பூசி நிலவரத்தை அறிய ரயில்வே, விமான நிறுவனங்கள், விடுதிகள் விரும்பலாம். இவா்களின் வசதிக்காக, புதிய செயலியை கோவின் உருவாக்கியுள்ளது. இதில் ஒருவரின் பெயா் மற்றும் செல்லிடப்பேசி எண்ணை உள்ளீடு செய்தால், அவா்களுக்கு கடவு எண் வரும். அதை உள்ளீடு செய்த பிறகு ‘0’ என வந்தால் தடுப்பூசி செலுத்தவில்லை என்றும், ‘1’ என வந்தால் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளாா் எனவும், ‘2’ என வந்தால், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளாா் எனவும் தெரிவிக்கும் வகையில் இந்தப் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com