நியூஸ்லாண்ட்ரி அலுவலகத்தில் வருமான வரி 'கணக்கெடுப்பு'; சுதந்திர ஊடகத்தின் மீதான தாக்குதலா?

வழக்கறிஞரிடம் பேச அனுமதி மறுக்கப்பட்டது என நியூஸ்லாண்ட்ரி செய்தி இணையதளத்தின் துணை நிறுவனர் அபிநந்தன் சிக்ரி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நியூஸ்லாண்ட்ரி, நியூஸ்கிளிக் செய்தி இணையதளங்களின் அலுவலகத்தில் 12 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை அலுவலர்கள் நேற்று 'கணக்கெடுப்பு' நடத்திய நிலையில், தன்னுடைய வழக்கறிஞரிடம் பேச அனுமதி மறுக்கப்பட்டது என நியூஸ்லாண்ட்ரி துணை நிறுவனர் அபிநந்தன் சிக்ரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சிக்ரி ட்விட்டரில் வெளியிட்ட கடிதத்தில், "செப்டம்பர் 10ஆம் தேதி மதியம் 12:15 மணி அளவில், நியூஸ்லாண்ட்ரி நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திற்கு வருமான வரித்துறையை சேர்ந்த குழு ஒன்று வந்து, பிரிவு 133A கீழ் 'கணக்கெடுப்பு' நடத்தியது. பின்னர், செப்டம்பர் 11ஆம் தேதி 12:40 மணிக்கு அவர்கள் திரும்பி சென்றனர்.

வழக்கறிஞரிடம் பேசக் கூடாது எனக் கூறியதால், எனது செல்லிடப்பேசியை ஒப்படைக்க வேண்யிடிருந்தது. சட்ட உதவியை நாடாமல் ஒத்துழைப்பு தர வேண்டும் என அலுவலர்கள் வலியுறுத்தினர். அலுவலகத்தில் உள்ள கணினிகள் என அனைத்து உபகரணங்களையும் சோதனை செய்தனர். என்னுடைய தனி செல்லிடப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை எடுத்து கொண்டு, அனைத்து தரவுகளை பதிவிறக்கம் செய்தனர். 

தனி செல்லிடப்பேசி, மடிக்கணினிகளிலிருந்து தகவல்கள் எடுத்து சென்றிருப்பது அடிப்படை தனியுரிமையை மறுக்கும் செயல். எந்த தகவல்களை எடுத்து சென்றார்கள் என்ற பட்டியலை கூட கொடுக்கவில்லை. ஆனால், அலுவலர்கள் மரியாதையாக நடந்து கொண்டார்கள். எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. சட்டத்தை மீறி செயல்படவில்லை. நாங்கள் எங்கள் பணியை நேர்மையாக மேற்கொண்டுவருகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, நியூஸ்லாண்ட்ரி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஜூன் மாதம் சோதனை நடத்தினர். சோதனை நடத்தப்பட்ட சில மாதங்களிலேயே வருமான வரித்துறை அலுவலர்கள் ஏன் அங்கு சென்றார்கள் என்பது குழுப்பமாகவே உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com