மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரேவால் போட்டி

மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள பவானிபூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரேவால் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரேவால் போட்டி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள பவானிபூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரேவால் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை பாஜக வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதேபோல் காலியாக உள்ள சம்சேர்கஞ்ச், ஜங்கிபூர் பேரவைத் தொகுதிகளில் முறையே மிலன் கோஷ், சுஜித் தாஸ் போட்டியிடுவார்கள் என்றும் பாஜக அறிவித்துள்ளது.

பவானிபூரில் போட்டியிட உள்ள பிரியங்கா வழக்குரைஞர் ஆவார். மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா டிப்ரேவால் கூறுகையில் "நந்திகிராம் தொகுதியில் மம்தா ஏற்கெனவே தோற்றுவிட்டார். இப்போது முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் பவானிபூரில் போட்டியிடுகிறார். நான் தொகுதி மக்களைச் சந்தித்து சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தொண்டர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகங்கள், வன்முறை ஆகியவற்றைப் பற்றி விளக்குவேன். பவானிபூர் மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்றும் மம்தாவை தோற்கடிப்பார்கள் என்றும் நம்புகிறேன்' என்றார்.

மேற்கு வங்க பாஜகவில் இளைஞர் அணித் துணைத் தலைவராக இருக்கும் பிரியங்கா கடந்த 2014-இல் அக்கட்சியில் சேர்ந்தார்.

அவர் முதன்முறையாக 2015-இல் கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டார். எனினும் அத்தேர்தலில் தோல்வியடைந்தார். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் என்டாலி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியைத் தழுவினார்.

எனினும், அவரது போர்க்குணம் காரணமாக மம்தாவை எதிர்த்துப் போட்டியிட பிரியங்காவை பாஜக தேர்வு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com