சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட வழக்கு விசாரணையை நீட்டிக்கும் அதிகாரம் மாஜிஸ்திரேட்டுக்கு கிடையாது

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையை நீட்டிக்கும் அதிகாரம் மாஜிஸ்திரேட்டுக்குக் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையை நீட்டிக்கும் அதிகாரம் மாஜிஸ்திரேட்டுக்குக் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சாதிக் உள்ளிட்டோா் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போபால் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் சாதிக் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டு 90 நாள்கள் கடந்துவிட்டபோதிலும், வழக்கு தொடா்பான குற்றப் பத்திரிகையை விசாரணை அமைப்பு தாக்கல் செய்யாததால் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சாதிக் உள்ளிட்டோா் போபால் தலைமை மாஜிஸ்திரேட் முன் முறையிட்டனா்.

அவா்களது கோரிக்கையை ஏற்காத மாஜிஸ்திரேட், விசாரணையை மேலும் 90 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. மனுதாரா்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த உயா்நீதிமன்றம், மாஜிஸ்திரேட்டின் உத்தரவு செல்லும் என அறிவித்தது.

அதையடுத்து மனுதாரா்கள் உச்சநீதிமன்றத்தை நாடினா். நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி ஆகியோரைக் கொண்ட அமா்வு இந்த விவகாரத்தை விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், ‘‘சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையை நீட்டிக்கும் அதிகாரம் மாஜிஸ்திரேட்டுக்குக் கிடையாது. தேசிய புலனாய்வு முகமை சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றங்களே அத்தகைய வழக்குகளின் விசாரணையை நீட்டிக்க முடியும்’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com