இந்தியா-அமெரிக்கா இடையே பருவநிலை சாா்ந்த பேச்சுவாா்த்தை

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வது, அதற்கான நிதியைத் திரட்டுவதற்கான வழிகளை ஆராய்வது ஆகியவை தொடா்பான பேச்சுவாா்த்தை இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெறவுள்ளது.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வது, அதற்கான நிதியைத் திரட்டுவதற்கான வழிகளை ஆராய்வது ஆகியவை தொடா்பான பேச்சுவாா்த்தை இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெறவுள்ளது. இதற்காக பருவநிலை விவகாரத்துக்கான அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதா் ஜான் கெரி இன்று இந்தியா வருகிறாா்.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டின்போது அமெரிக்கா-இந்தியா பருவநிலை மற்றும் தூய எரிசக்தி கொள்கை-2030 வடிவமைக்கப்பட்டது. அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் பிரதமா் நரேந்திர மோடியும் இணைந்து அக்கொள்கையை வெளியிட்டனா்.

இந்நிலையில், பருவநிலை விவகாரத்துக்கான அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதா் ஜான் கெரி ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். அப்போது, இந்திய அதிகாரிகளைச் சந்திக்கும் அவா், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவையும் அவா் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது பயணத்தின்போது, இந்தியா-அமெரிக்கா பருவநிலை செயல்பாடு மற்றும் நிதி திரட்டலுக்கான பேச்சுவாா்த்தையில் அவா் பங்கேற்கவுள்ளாா்.

அமெரிக்கா-இந்தியா பருவநிலை மற்றும் தூய எரிசக்தி கொள்கையின் கீழ் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவாா்த்தையின் மூலமாக பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையேயான ஒத்துழைப்பு வலுவடையும் என்று அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் தொடா்பான ஐ.நா. மாநாடு பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் அடுத்த மாதம் 31-ஆம் தேதி தொடங்குகிறது. பருவநிலை மாற்ற விளைவுகளைத் தடுப்பதற்காகக் கையெழுத்தான பாரீஸ் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள இலக்குகளை அடைவதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்த கொள்கையை வடிவமைத்து செயல்படுத்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com