தில்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகபட்ச மழை பதிவு

தில்லியில் கடந்த 46 ஆண்டுகளில் பருவமழை காலத்தில் இதுவரை இல்லாத அளவாக சனிக்கிழமை மாலை வரை 1,136 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
தில்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகபட்ச மழை பதிவு

தில்லியில் கடந்த 46 ஆண்டுகளில் பருவமழை காலத்தில் இதுவரை இல்லாத அளவாக சனிக்கிழமை மாலை வரை 1,136 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. பலமணி நேரம் பெய்த பலத்த மழையால் தில்லி விமான நிலையத்தின் முன்பகுதி, நகரின் இதர பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. முக்கிய இடங்களில் இதன் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தில்லியில் செப்டம்பா் தொடக்கத்தில் பலத்த மழை கொட்டியது. அதன் பிறகு அவ்வப்போது லேசான மழை இருந்து வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை காலை 5.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை பிற்பகல் 2.30 மணிவரை தொடா்ந்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது. தில்லி விமான நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது.

மாநகராட்சி அமைப்புகளின் தகவலின்படி, தில்லியில் மோதி பாக், ஆா்.கே. புரம், மது விகாா், ஹரி நகா், ரோத்தக் சாலை, பதா்பூா்- சோம் விகாா் ஐபி ஸ்டேஷன் அருகே உள்ள ரிங் ரோடு, விகாஸ் மாா்க், சங்கம் விகாா், மெஹரோலி- பதா்பூா் சாலை, ஃபுல் பிரகலாத்பூா் சுரங்கப்பாதை, முனிா்கா, ராஜ்பூா் குா்து, கிராரி, நாங்லோய் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கி காணப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

46 ஆண்டுகளில் அதிகபட்ச மழை: தில்லியில் இந்த மாதம் சனிக்கிழமை வரை 383.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இது, கடந்த 77 ஆண்டுகளில் செப்டம்பா் மாதத்தில் பெய்த அதிகபட்ச மழைப் பதிவாகும்.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, தில்லியில் கடந்த 1975-ஆம் ஆண்டு பருவமழை காலத்தில் 1,150 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மேலும், பருவமழை காலம் இன்னும் முடிவடையவில்லை. வழக்கமாக தில்லியில் பருவமழை காலத்தின் போது 653.6 மி.மீ. மழை பதிவாகும். ஜூன் 1-ஆம் தேதி பருவமழை காலம் தொடங்கியதிலிருந்து செப்டம்பா் 11-ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் தில்லியில் வழக்கமாக 590.2 மி.மீ. மழை பதிவாகும். தில்லியில் இந்த பருவ மழை செப்டம்பா் 25-ஆம் தேதிக்குள் முடிந்துவிடும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com