யோகி அரசின் விளம்பர புகைப்படங்களில் மேற்குவங்க அரசு கட்டிய மேம்பாலங்கள்

உத்தரப் பிரதேச அரசின் சாதனைகளை விளக்கும் விளம்பரத்தில் கொல்கத்தா பாலத்தின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது விமரிசத்திற்குள்ளாகிவருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  மீண்டும் ஆட்சி அமைப்பதற்காக பாஜக தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கியுள்ளது.

அந்த வகையில், இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மேற்கொண்ட திட்டங்களை விளக்கும் வகையில் பாஜக விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, 'யோகி ஆதித்யநாத் தலைமையில் மாற்றம் கண்டு வரும் உத்தரப் பிரதேசம்' என்ற தலைப்பில் முழுப்பக்க விளம்பரம் இன்று வெளியிடப்பட்டது. இந்த விளம்பரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனென்றால், மேற்குவங்கத்தில் உள்ள மேம்பாலம் ஒன்று இதில் இடம்பெற்றுள்ளது. இது, மம்தா பானர்ஜி அரசால் கட்டப்பட்ட 'மா மேம்பாலம்' என சிலர் கூறுகின்றனர். 

கொல்கத்தாவிலுள்ள புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலின் புகைப்படங்கள் விளம்பரத்தில் காட்டப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இதனை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் விமரிசித்துவருகின்றனர்.

மம்தாவின் உறவினரும் திரிணமுல் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி ட்விட்டரில், "மம்தா அரசு மேற்குவங்கத்தில் கட்டிய பாலங்களின் படங்களைத் திருடி தனது சாதனையாக கூறி கொள்வதுதான் யோகி ஆதித்யநாத்தை பொறுத்தவரை உத்தரப் பிரதேசத்தை மாற்றுவது போல. பாஜகவின் ஆளும் மாநிலத்திலேயே அவர்கள் கூறும் 'இரட்டை என்ஜின் மாடல்' முற்றிலும் தோல்வியடைந்ததையே இது வெளிப்படையாக காட்டுகிறது" என பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com