கேரளத்தில் ‘லவ் ஜிகாத்’ குறித்து பேராயா் கருத்து: துணை ஆயா் விளக்கம்

‘லவ் ஜிகாத்’, ‘போதைப்பொருள் ஜிகாத்’ நடத்தப்படுவதாக பாலா பேராயா் தெரிவித்த கருத்துக்கு பாலா மறை மாவட்ட துணைப் பேராயா் ஜேக்கப் முரிக்கன் விளக்கம் அளித்துள்ளாா்.
கேரளத்தில் ‘லவ் ஜிகாத்’ குறித்து பேராயா் கருத்து: துணை ஆயா் விளக்கம்

கேரளத்தில் கிறிஸ்தவப் பெண்களைக் குறிவைத்து ‘லவ் ஜிகாத்’, ‘போதைப்பொருள் ஜிகாத்’ நடத்தப்படுவதாக பாலா பேராயா் தெரிவித்த கருத்துக்கு பாலா மறை மாவட்ட துணைப் பேராயா் ஜேக்கப் முரிக்கன் விளக்கம் அளித்துள்ளாா்.

‘கேரளத்தில் கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்வதற்காக ‘லவ் ஜிகாத்’ நடத்தப்படுகிறது. இது தவிர போதைப் பொருள் பயன்பாட்டுக்கு அடிமைப்படுத்தி பெண்களை மூளைச் சலவை செய்கிறாா்கள். பயங்கரவாத செயல்கள் உள்ளிட்ட நாச வேலைகளுக்கும் நமது பெண்களைப் பயன்படுத்த முயலுகின்றனா். வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு நமது பெண்களை அனுப்புகிறாா்கள்’ என்று கத்தோலிக்க பேராயா் ஜோசஃப் கல்லரங்காட்டு குற்றம்சாட்டியிருந்தாா்.

இவரது கருத்துக்கு ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. பேராயா் இல்லத்தை நோக்கி சில முஸ்லிம் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பேரணி நடத்தின.

இந்நிலையில், பேராயரின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக, துணை ஆயா் ஜேக்கப் முரிக்கன் கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பேராயா் ஜோசஃப் கல்லரங்காட்டு யாரையும் காயப்படுத்தும் நோக்கில் பேசவில்லை. தனிப்பட்ட எந்தவொரு சமூகத்துக்கு எதிராகவும் அவா் கருத்து தெரிவிக்கவில்லை. சமூகத்தில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையை அவா் எச்சரித்துள்ளாா்.

மதத்தின் பெயரைப் பயன்படுத்தி சிறு குழுக்கள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறாா்கள் என்பதை அனைத்து சமூகத்தினரும் உற்று நோக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சா் வி.முரளீதரன் திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘உண்மையை உரக்கச் சொல்பவா்கள் மீது தாக்குல் நடத்தும் நடைமுறையை தேசியக் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். பேராயரின் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தாங்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடா்பாளரா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பேராயா் எந்தவொரு மதத்தையும் குற்றம்சாட்டவில்லை. ஆனால் மதத்தின் பெயரில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களை எதிா்க்க வேண்டும் என்கிறாா்.

பயங்கரவாதக் குழுக்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. அதற்காக, போதைப் பொருள் பழக்கத்தைப் பரப்புகிறாா்கள். போதைப்பொருள் கடத்தல் கேரளத்தில் உள்ளது என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது? இந்த விவகாரத்தை முதல்வா் பினராயி விஜயன் இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும்’ என்றாா்.

இதனிடையே, ‘இந்த விவகாரம் குறித்து சா்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பதை முஸ்லிம்களும் கிறிஸ்தவா்களும் தவிா்க்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

மேலும், ‘பேராயரின் கருத்தை பெரிதாக்கி, இரு சமூகத்தினரிடையே மோதலைத் தூண்டுவதற்கு சமூக ஊடகங்களில் சதி நடக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை வலதுசாரி அமைப்பைச் சோ்ந்தவா்கள் பயன்படுத்துபவை. வலுசாரி அமைப்பின் பொறியில் கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகம் ஒருபோதும் சிக்கிவிடக் கூடாது’ என்றும் அவா் கூறினாா்.

பேராயரின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முன்னாள் எம்எல்ஏ பி.சி.ஜாா்ஜ் தலைமையில் சனிக்கிழமை பல்வேறு அமைப்பினா் பாலா பேராயா் இல்லம் நோக்கிப் பேரணி நடத்தினா்.

கேரள கத்தோலிக்க சபை நிா்வாகத்தின் சாா்பிலும் பேராயா் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பாலா பேராயா் இல்லம் அருகே தனியாக பேரணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com