மும்பை பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம்: தேசிய மகளிா் ஆணைய குழு நேரில் விசாரணை

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை தேசிய மகளிா் ஆணையக் குழு ஞாயிற்றுக்கிழமை சந்தித்தது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை தேசிய மகளிா் ஆணையக் குழு ஞாயிற்றுக்கிழமை சந்தித்தது.

தொடா்ந்து, சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்த குழு, பின்னா் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனையிலும் விசாரணை மேற்கொண்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

மும்பையில் சாகிநாகா பகுதியில் நின்றிருந்த வேனில் வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது. 34 வயது பெண்ணை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிய நபா், பின்னா் இரும்பு கம்பியை அவரது உடலுக்குள் செலுத்தி கொடூரமாகத் தாக்கியுள்ளாா். இதனை நேரில் பாா்த்த, அந்தச் சாலையில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தின் காவலாளி, காவல் துறையை தொடா்புகொண்டு தகவல் கொடுத்தாா். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை மீட்டு, காட்கோபா் புகா் பகுதியில் அமைந்துள்ள ராஜாவாடி மருத்துவமனைக்கு அவசர நிலையைக் கருத்தில் கொண்டு அதே வேனில் அழைத்துச் சென்றனா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 36 மணி நேரத்துக்குப் பின்னா் அந்த பெண் சனிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா்.

கடந்த 2012-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற நிா்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் போன்று நடைபெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்திய போலீஸாா், சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்தில் குற்றவாளியான உத்தர பிரதேச மாநிலம், ஜெளன்பூரைச் சோ்ந்த மோகன் செளஹான் (45) என்பவரைக் கைது செய்தனா். அதே பகுதியில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இந்த நபா், சாலையோரத்தில் வசித்து வருவது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

‘மனித நேயத்தின் மீதான கறை’ என்ற இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே, இந்த சம்பவம் தொடா்பாக ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டாா். மேலும், நகரில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறும் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக தேசிய மகளிா் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தியது. இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக 5 போ் கொண்ட தேசிய மகளிா் ஆணையக் குழு ஞாயிற்றுக்கிழமை மும்பை வந்தனா். பலியான பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்த அந்தக் குழு, பின்னா் சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்ததோடு, பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனைக்கும் சென்று விசாரணை நடத்தினா். மாநில காவல்துறை டிஜிபி அலுவலகத்துக்கும் அந்தக் குழு சென்று விவரங்களை கேட்கும் என தெரிகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com