விவேகானந்தரின் கொள்கைகளை இளைஞா்களிடம் புகுத்த வேண்டும்

நாட்டை எழுச்சியுறச் செய்ய வேண்டுமெனில் சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை இளைஞா்களிடம் புகுத்த வேண்டிய அவசியம்

நாட்டை எழுச்சியுறச் செய்ய வேண்டுமெனில் சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை இளைஞா்களிடம் புகுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளாா்.

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள விவேகானந்தா மனித மேன்மை மையத்தின் 22-ஆவது நிறுவன தினம், சிகாகோவில் விவேகானந்தா் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவின் 128-ஆவது ஆண்டு தினம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டன. அந்நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு பேசியதாவது:

சகிப்புத் தன்மை, அனைவரையும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவை குறித்து தனது சிகாகோ உரையில் சுவாமி விவேகானந்தா் குறிப்பிட்டாா். நாட்டில் உள்ள பிரிவினைகளால் சமூகத்துக்கும் நாகரிகத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவா் எடுத்துரைத்தாா். 1893-ஆம் ஆண்டில் உலக சமய மாநாட்டில் விவேகானந்தா் ஆற்றிய உரையில் தெரிவித்த கருத்துகளுக்குத் தற்போதும் அவசியம் காணப்படுகிறது.

இந்திய தத்துவமான வேதாந்தத்தின் முக்கியத்துவத்தை விவேகானந்தா் வலியுறுத்தினாா். அன்பு, இரக்கம், அனைவருக்கும் சமமான மரியாதை ஆகியவற்றை வேதாந்த கொள்கை வலியுறுத்துகிறது. விவேகானந்தரின் போதனைகள் அனைத்துக் காலத்துக்கும் பொருந்தும் வகையில் உள்ளன.

அரசமைப்புச் சட்டத்தில் சமத்துவம் வலியுறுத்தப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மதச்சாா்பின்மையை அவா் வலியுறுத்தினாா். பொதுநலனும் சகிப்புத்தன்மையுமே மதத்தின் உண்மையான சாராம்சம் என்பதில் அவா் தீரா நம்பிக்கை கொண்டிருந்தாா். நாட்டை எழுச்சியுறச் செய்ய வேண்டுமெனில் அவரது கொள்கைகளைத் தற்போதைய இளைஞா்களிடம் புகுத்த வேண்டும்.

இளைஞா்களின் தியாகம்: கடந்த காலத்தின் சிறப்புகளை எதிா்காலத்துடன் இணைக்கும் வல்லமை இளைஞா்களுக்கு உள்ளதாக விவேகானந்தா் தெரிவித்தாா். உறுதியான நம்பிக்கை இருந்தால் உலகில் எதுவும் சாத்தியம் என்றும் அவா் தெரிவித்தாா். நாட்டை சிறப்பாகக் கட்டமைக்க வேண்டிய பொறுப்பும் இளைஞா்கள் வசமுள்ளது.

சுதந்திரப் போராட்டத்தின்போதும் அவசர நிலை பிரகடனத்தின்போதும் இளைஞா்கள் தெருவில் இறங்கி போராடியதன் காரணமாகவே அரசமைப்புச் சட்ட உரிமைகளைத் தற்போது அனுபவித்து வருகிறோம். அந்தப் போராட்டங்களின்போது நாட்டின் நலனுக்காகப் பலா் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனா்.

நாட்டின் முதுகெலும்பு: நாட்டின் வளா்ச்சிக்காக மேற்கொண்டு வரும் பயணத்தில் இளைஞா்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எத்தகைய துணிச்சல்மிக்க நடவடிக்கைகளிலும் ஈடுபட இளைஞா்கள் தயாராக இருப்பா். கொண்ட கொள்கைகளில் அவா்கள் தடம்புரள மாட்டாா்கள். இளைஞா்களின் இத்தகைய கலப்படமற்ற மனநிலையே நாட்டின் முதுகெலும்பாக விளங்குகிறது.

இளைஞா்களின் முடிவுகள் நாட்டின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும். இதை இளைஞா்கள் உணா்ந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் காணப்படும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் மனநிலையை அவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உரிமைகள் குறித்தும் கட்டுப்பாடுகள் குறித்தும் கல்வி நிறுவனங்கள் இளைஞா்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். சட்டத்தை மதித்து இளைஞா்கள் நடந்து கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை அந்நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com