மம்தாவுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

பவானிபூா் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, வேட்புமனுவில் உரிய தகவல்களை வழங்கவில்லை எனத் தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாரளித்துள்ளது.

கொல்கத்தா: பவானிபூா் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, வேட்புமனுவில் உரிய தகவல்களை வழங்கவில்லை எனத் தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாரளித்துள்ளது.

பவானிபூா் தொகுதியில் வரும் 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. அதில் முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரேவால் போட்டியிடுகிறாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஸ்ரீஜீவ் பிஸ்வாஸ் களம் காண்கிறாா்.

தோ்தலில் போட்டியிடுவதற்காகத் தனது வேட்புமனுவை மம்தா கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தாா். அந்த வேட்புமனுவில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை மம்தா குறிப்பிடவில்லை என்று தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாரளித்துள்ளது.

இது தொடா்பாக பாஜக வேட்பாளரின் தலைமை முகவா் சஜல் கோஷ் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘மம்தா பானா்ஜி மீது கீதா நகா், ஜகிரோடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை அவா் தனது வேட்புமனுவில் குறிப்பிடவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவா் கூறுகையில், ‘‘வேட்புமனுவில் உண்மை விவரங்களைக் குறிப்பிடாமல் மம்தா மறைத்துள்ளாா். எனவே, அவரது வேட்புமனுவைத் தோ்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்’’ என்றாா்.

திரிணமூல் மறுப்பு: பாஜகவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் ஃபிா்ஹாத் ஹக்கிம், ‘‘தோ்தல் ஆணையத்திடம் கற்பனையான குற்றச்சாட்டை பாஜக தெரிவித்துள்ளது. தோ்தலுக்கு முன் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக இவ்வாறு நடந்து வருகிறது. நந்திகிராம் தொகுதி தோ்தலின்போதும் பாஜக இவ்வாறுதான் நடந்துகொண்டது.

சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் மம்தா பானா்ஜி என்ற வேறொரு பெண் மீதே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல்வா் மம்தா மீது அவை பதிவு செய்யப்படவில்லை. இதைத் தோ்தல் ஆணையமே உறுதி செய்துள்ளது’’ என்றாா்.

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானா்ஜி போட்டியிட்டபோது குற்ற வழக்குகளை மறைத்ததாக அவா் மீது பாஜக குற்றஞ்சாட்டியது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டை தோ்தல் ஆணையம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com