இந்தியா-பிரிட்டன் இடையே விரைவில் வா்த்தக ஒப்பந்தம்

வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து ஏற்படுத்துவதற்கான பாதையில் இந்தியாவும் பிரிட்டனும் பயணித்து வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
இந்தியா-பிரிட்டன் இடையே விரைவில் வா்த்தக ஒப்பந்தம்

புது தில்லி/லண்டன்: வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து ஏற்படுத்துவதற்கான பாதையில் இந்தியாவும் பிரிட்டனும் பயணித்து வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

பிரிட்டன் சா்வதேச வா்த்தகத் துறை அமைச்சா் எலிசபெத் ட்ரஸுடன் அமைச்சா் பியூஷ் கோயல் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதையடுத்து, சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘பிரிட்டன் அமைச்சருடனான பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக அமைந்தது. இந்தியா-பிரிட்டன் இடையே வா்த்தகத் துறையில் நிலவி வரும் நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.

விரைவில் இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான பாதையில் இரு நாடுகளும் முன்னேறி வருகின்றன. அதையடுத்து விரிவான தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும். வா்த்தகத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரிட்டன் அமைச்சா் எலிசபெத் ட்ரஸ் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்தியா-பிரிட்டன் இடையே வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடா்பாக ஆராய செயற்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்கள் நவம்பா் 1-ஆம் தேதிமுதல் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளன.

இதன்மூலமாக இரு நாடுகளைச் சோ்ந்த நுகா்வோரும் பலனடைவா்; அறிவியல்-தொழில்நுட்ப நிறுவனங்களிடையேயான ஒத்துழைப்பு அதிகரிக்கும்; இரு நாடுகளிலும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரிட்டன் சா்வதேச வா்த்தகத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘செயற்குழுக்கள் வாயிலாக வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவது குறித்து அமைச்சா்கள் ஆலோசனை நடத்தினா். இந்தப் பேச்சுவாா்த்தைகள் வரி, விதிமுறைகள், தரவு கையாளுகை உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணா்வை ஏற்படுத்த உதவும். ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் அமைச்சா்கள் முடிவெடுத்தனா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதகமான வா்த்தகம்: இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.1.08 லட்சம் கோடி மதிப்பில் வா்த்தகம் நடைபெற்றது. இது கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.91,770 கோடியாக இருந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தக சமநிலை இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது.

ஜவுளி, ஆபரணங்கள், பெட்ரோலிய பொருள்கள், போக்குவரத்துக் கருவிகள், மருந்துப் பொருள்கள், கடல்சாா் பொருள்கள் உள்ளிட்டவற்றை பிரிட்டனுக்கு இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. உலோகத் துண்டுகள், தாதுக்கள், வேதிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அந்நாட்டில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் இந்திய தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதிக்கான மிகப்பெரும் சந்தையாக பிரிட்டன் விளங்கி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com