அரசியல் கட்சிகள் கருத்துகளைத் தெரிவிக்கும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்

அரசியல் கட்சிகள் கருத்துகளைத் தெரிவிக்கும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலன் சிங் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் கருத்துகளைத் தெரிவிக்கும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்


புது தில்லி: அரசியல் கட்சிகள் கருத்துகளைத் தெரிவிக்கும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலன் சிங் தெரிவித்தார்.
முன்னதாக உத்தர பிரதேச மாநிலம், குஷிநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஆதித்யநாத் பேசுகையில், "கடந்த 2017-க்கு முன்பு வரை "அப்பா ஜான்' என்று எவர் கூறுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் கிடைக்கும். இன்றுபோல அக்காலத்தில் பொருள்களை யாரும் வாங்க முடியாது. குஷிநகர் ரேஷன் பொருள்கள் அனைத்தும் நேபாளத்துக்கும் வங்கதேசத்துக்கும் சென்று கொண்டிருந்தன. ஆனால், இப்போது யாராவது ரேஷன் பொருள்களைத் திருட முயற்சித்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்' என்று கூறியிருந்தார். 
"அப்பா ஜான்' என்ற சொல்லுக்கு உருது மொழியில் தந்தை என்று பொருள்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் முங்கர் தொகுதி எம்.பி.யுமான லாலன் சிங் கூறியதாவது: 
அரசியல் கட்சிகள் கருத்துகளைத் தெரிவிக்கும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்நாடு ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது. 
வேற்றுமையில் ஒற்றுமை காண்பது நமது நாடு. விரும்பத்தகாத கருத்துகள் காயத்தையே ஏற்படுத்தும். ஜிந்த் நகரில் வரும் 25-ஆம் தேதி லோக் தளம் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் செüதாலா ஏற்பாடு செய்துள்ள பேரணியில் எங்கள் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி கலந்துகொள்வார்.
பாஜக, காங்கிரஸ் இடம்பெறாத மூன்றாவது அணிக்கு ஓம்பிரகாஷ் முயற்சி செய்வதாகக் கூறுகிறீர்கள். ஆனால், நாங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உறுதிபட இருக்கிறோம். தேவிலால் பிறந்த நாளையொட்டி நடைபெறும் பேரணி என்பதால் அதில் நாங்கள் கலந்துகொள்கிறோம். முந்தைய காலங்களில் ஓம் பிரகாஷ் செüதாலா, பிகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் கூட்டணியில் இருந்தார். அதனால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அவர் முதல்வர் நிதீஷ் குமாருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனினும் முதல்வரால் பங்கேற்க இயலவில்லை. எனவே கே.சி.தியாகி கலந்துகொள்கிறார்.
 உத்தர பிரதேசம், மணிப்பூரில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். பாஜகவுடன் இணைந்தோ அல்லது தனித்தோ போட்டியிடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com