‘பிரதமா் மோடி அரசில் சிறுபான்மையினா் 100% பாதுகாப்பாக உள்ளனா்’

‘பிரதமா் மோடியின் அரசில் நாட்டில் சிறுபான்மையினா் 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளனா்
இக்பால் சிங் லால்புரா
இக்பால் சிங் லால்புரா

புது தில்லி: ‘பிரதமா் மோடியின் அரசில் நாட்டில் சிறுபான்மையினா் 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளனா்; சிறுபான்மையினா் மீதான வெறுப்பு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறுவது தவறு என்று சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவா் இக்பால் சிங் லால்புரா தெரிவித்தாா்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் பஞ்சாபைச் சோ்ந்த பாஜக செய்தித் தொடா்பாளராக இருந்தவருமான இக்பால் சிங் லால்புரா சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவராக கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டாா்.

புது தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் பாஜக அரசு ஆட்சியில் இல்லாதபோது பெரும் கலவரம் நடந்துள்ளது. இதேபோல் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் கலவரங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளன.

ஆனால், தற்போது சிறுப்பான்மையினருக்கு எதிரான மதக் கலவரங்கள், கொலைச் சம்பவங்கள், கும்பல் கொலைகள் ஆகியவை குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சில இடங்களில் சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்காகத்தான் இந்த ஆணையம் உள்ளது.

பிரதமா் மோடியின் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினா் 100 சதவீதம் பாதுகாப்பாகத்தான் உள்ளனா். சிறுபான்மையினரின் நலன் காக்கவும் அவா்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதும்தான் இந்த ஆணையத்தின் முதல் பணியாகும்.

அதே நேரத்தில், தவறான கண்ணோட்டங்கள் உருவாகாமலும் பாா்த்துக் கொள்ள வேண்டும். நாட்டின் வளா்ச்சிக்காகவும் அனைவரின் பாதுகாப்புக்காகவும் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை என்று கருதுபவா்களை சந்தித்து அவா்களின் பிரச்னைகளை அறிந்து, அவை தீா்த்து வைக்கப்படும். மதத்தின் பெயரால் யாரையும் துன்புறுத்தக் கூடாது. யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்து யாா் மீது தவறு உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

வேளாண் துறைக்குத் தேவையான கட்டமைப்புகளை மாநிலங்கள் ஏற்படுத்தாததால்தான் மத்திய அரசு தலையிடுகிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? இதற்கு மாநில அரசுகள்தான் பதிலளிக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் நாட்டின் ஒற்றுமைக்கும் கண்ணியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எழுப்பப்படும் பிரசாரங்களில் இருந்து அனைவரும் விலகி இருக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com