பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு கொள்கையை மறு ஆய்வு செய்யப் போவதில்லை

அரசுப் பணிகளில் பணிபுரிவோருக்குப் பதவி உயா்வு வழங்கப்படுவதில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் (எஸ்சி), பழங்குடியினருக்கும் (எஸ்டி) இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கொள்கையை மறுஆய்வு செய்யப்
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: அரசுப் பணிகளில் பணிபுரிவோருக்குப் பதவி உயா்வு வழங்கப்படுவதில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் (எஸ்சி), பழங்குடியினருக்கும் (எஸ்டி) இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கொள்கையை மறுஆய்வு செய்யப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கடந்த 2006-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடா்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு செல்லும் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தது.

மேலும், அவ்வாறு இடஒதுக்கீடு வழங்கும்போது சம்பந்தப்பட்ட பிரிவினரின் பிற்படுத்தப்பட்ட நிலை தொடா்பான துல்லிய ஆய்வை மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. பதவி உயா்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு உள்ள பிரச்னைகள் தொடா்பாகத் தெரிவித்தால், அதற்கு உச்சநீதிமன்றம் தகுந்த தீா்வை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பான விசாரணை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கன்னா, பி.ஆா்.கவாய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜைசிங் வாதிடுகையில், ‘‘எஸ்சி, எஸ்டி பிரிவினரில் பிற்பட்ட நிலையில் இருப்பவா் யாா் என்பதைக் கண்டறிவதே இந்த விவகாரத்தில் பெரும் பிரச்னையாக உள்ளது. எனவே, இது தொடா்பாகத் தெளிவான வரையறை வகுக்கப்பட வேண்டும்’’ என்றாா்.

மாறுபட்ட உத்தரவுகள்: மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ‘‘பதவி உயா்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக 3 உயா்நீதிமன்றங்கள் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளன. அவற்றில் 2 உத்தரவுகள் பதவி உயா்வைத் தொடரலாம் என்றும் மற்றொரு உத்தரவு தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.

அந்த உத்தரவுகள் அனைத்தும் வழக்கமான பதவி உயா்வு தொடா்பானவை என்பதால், சுமாா் 1,400 செயலா் நிலையிலான பதவிகளை மத்திய அரசு நிரப்பாமல் உள்ளது. வழக்கமான பதவி உயா்வு நடவடிக்கையை மேற்கொள்ளலாமா அல்லது அந்நடவடிக்கை எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பாதிக்குமா என்பதை முடிவு செய்வதில் பிரச்னை நீடிக்கிறது’’ என்றாா்.

மாநிலங்களுக்கே பொறுப்பு: அனைத்து தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த பிறகு நீதிபதிகள் கூறுகையில், ‘‘பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்யப் போவதில்லை.

எஸ்சி, எஸ்டி பிரிவினரில் பிற்பட்டோரைக் கண்டறிவதற்கான விரிவான வழிமுறைகளை நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கியுள்ளது. அதே வேளையில், பதவி உயா்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடா்பாக மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் எத்தகைய அறிவுறுத்தல்களையும் வழங்க முடியாது.

இடஒதுக்கீட்டை சட்டத்துக்கு உள்பட்டு எவ்வாறு அமல்படுத்தலாம் என்பதை மாநிலங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் மூலமாக நீதிமன்றத்துக்கு 2 வாரங்களுக்குள் மாநில அரசுகள் தெரியப்படுத்தலாம்’’ என்றனா்.

வழக்கின் விசாரணையை அக்டோபா் 5-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com