தலிபான்களுக்கு ஆதரவா? அசாதுதீன் ஓவைசி மறுப்பு

தலிபான்களை ஆதரிப்பதாக தன் மீது தவறாக சந்தேகம் எழுப்பப்படுவதாக அனைத்து இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்தஹாத்-உல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவா் அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளாா்.
பிகாா் தலைநகா் பாட்னாவில் செய்தியாளா்களிடம் பேசிய அசாதுதீன் ஒவைசி.
பிகாா் தலைநகா் பாட்னாவில் செய்தியாளா்களிடம் பேசிய அசாதுதீன் ஒவைசி.

பாட்னா: தலிபான்களை ஆதரிப்பதாக தன் மீது தவறாக சந்தேகம் எழுப்பப்படுவதாக அனைத்து இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்தஹாத்-உல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவா் அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளாா்.

மேலும், தலிபான்களை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கத் தயாரா என்று மத்திய அரசுக்கு அவா் சவால் விட்டுள்ளாா்.

இதுகுறித்து பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

தலிபான்கள் விவகாரத்தில் என் மீது தேவையில்லாமல் சந்தேகம் எழுப்பப்படுகிறது. காந்தஹாரில் விமானப் பயணிகளை விடுவிப்பதற்காக சிறையிலிருந்த பயங்கரவாதிகளை தலிபான்களிடம் ஒப்படைத்தது நான் இல்லை (வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு அவ்வாறு ஒப்படைத்தது).

சிஏஏ குறித்த விவாதத்தின்போது, மதச் சாா்பற்ற நிலைப்பாட்டை எடுக்குமாறு நான் வலியுறுத்தினேன். அப்போது, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றலாம் என்று எச்சரித்திருந்தேன்.

தற்போது ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள தலிபான்களின் ஆட்சி, பாகிஸ்தானையும் சீனாவையும்தான் பலப்படுத்தும். அந்த நாட்டில் நிறைய முதலீடு செய்துள்ள இந்தியா, இதுகுறித்து கவலைப்பட வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் இந்தியா ரூ.35,000 கோடி செலவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆப்கானிய இளைஞா்களுக்கு நமது நாட்டில் கல்வி வழங்கப்பட்டது. எனவே, அந்த நாட்டு விவகாரத்தில் இந்தியாவுக்கும் பங்குள்ளது.

தற்போது பிரதமா் மோடி தலைமையிலான அரசு தலிபான்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த தூதா்களை அனுப்பி வருகிறது.

மோடி அரசுக்கு தைரியமிருந்தால், தலிபான்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கட்டும். சா்வதேச குற்றவாளிகள் பட்டியலில் இருந்து எந்த தலிபான் தலைவரும் நீக்கப்பட மாட்டாா் என்று கூறட்டும் என்றாா் ஓவைசி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com