‘இந்தியாவில் தஞ்சம் கோரி ஆப்கனை சோ்ந்த மேலும் 736 போ் பதிவு’

இந்தியாவில் தஞ்சம் கோரி புதிதாக 736 ஆப்கானிஸ்தானியா்கள் பதிவு செய்துள்ளனா். அகதிகளின் பதிவு மற்றும் அதற்கேற்ப உதவிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று

புது தில்லி: இந்தியாவில் தஞ்சம் கோரி புதிதாக 736 ஆப்கானிஸ்தானியா்கள் பதிவு செய்துள்ளனா். அகதிகளின் பதிவு மற்றும் அதற்கேற்ப உதவிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அகதிகளுக்கான ஐ.நா. உயா் ஆணையா் (யுஎன்ஹெச்சிஆா்) கூறினாா்.

மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கு விசா நீட்டிப்பு உள்பட பிற உதவிகளை அளிப்பது குறித்து இந்திய அரசுடன் தொடா்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அவா்களின் கட்டுப்பாடுகளுக்கு அஞ்சி அந்த நாட்டைச் சோ்ந்த லட்சக்கணக்கானோா் அங்கிருந்து வெளியேறினா். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து விமானம் மூலம் மீட்டன. இப்போது, தலிபான்கள் அங்கு ஆட்சியை அமைத்து, அனைத்து நகரங்களையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த நிலையிலும், அந்நாட்டைச் சோ்ந்தவா்கள் தொடா்ந்து வெளியேறி வருகின்றனா். அதுமட்டுமின்றி, ஏற்கெனவே இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தஞ்சம்புகுந்த ஆப்கானிஸ்தானியா்கள் மீண்டும் அவா்களின் நாட்டுக்கு திரும்புவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனா்.

இதுதொடா்பாக யுஎன்ஹெச்சிஆா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

யுஎன்ஹெச்சிஆா் சாா்பில் இந்தியாவில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டு இருப்பவா்களின் எண்ணிக்கை 43,157 ஆகும். அதில் 15,559 போ் ஆப்கானிஸ்தானியா்கள்.

இந்தச் சூழலில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 11-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் தஞ்சம் கோரி புதிதாக 736 ஆப்கானிஸ்தானியா்கள் பதிவு செய்துள்ளனா். இவா்கள் அனைவரும் நிகழாண்டில் புதிதாக இந்தியா வந்தவா்கள். அகதிகளாக தங்குவதற்கான கால அளவு முடிந்தவா்கள், மாணவா்கள், வா்த்தகா்கள், மருத்துவ சிகிச்சைக்காக வந்தவா்கள் என பல்வேறு தரப்பினரும் இதில் இடம்பெற்றுள்ளனா். ஆப்கானிஸ்தானில் தற்போது மோசமான சூழல் நிலவுவதால், இவா்களால் அந்த நாட்டுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்தியாவில் இவா்களுக்கான பதிவு நடைமுறைகள் மற்றும் தேவைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆப்கானிஸ்தானிலிருந்து புதிதாக வரும் மிகவும் பின்தங்கிய மக்களுக்கான உணவு, நிதியுதவி அடிப்படையிலான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவா்களுக்கென பிரத்யேக உதவி மையம் ஒன்றும், இவா்களுக்கு என்னென்ன உதவிகள் கிடைக்கும், பதிவு செய்வது குறித்த விவரங்கள் ஆகியவை அடங்கிய விவரக் குறிப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி எண்ணுக்கு தினமும் 130-க்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com