கடன் வழங்கும் நடைமுறைகளைப் புறக்கணித்ததால் மிகப் பெரிய வங்கி மோசடிகள்: சிவிசி

கடன் வழங்குவதிலும் பொதுவான செயல்பாடுகளிலும் ஒழுங்குமுறைகளையும் நடைமுறைகளையும் புறக்கணித்ததால் மிகப்பெரிய வங்கி மோசடிகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றுள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு
கடன் வழங்கும் நடைமுறைகளைப் புறக்கணித்ததால் மிகப் பெரிய வங்கி மோசடிகள்: சிவிசி

புதுதில்லி: கடன் வழங்குவதிலும் பொதுவான செயல்பாடுகளிலும் ஒழுங்குமுறைகளையும் நடைமுறைகளையும் புறக்கணித்ததால் மிகப்பெரிய வங்கி மோசடிகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றுள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு துறையின் தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளுடன் வருடாந்திர ஆய்வுக் கூட்டத்தை சிவிசி நடத்தி வருகிறது. இதன்படி அண்மையில் வங்கித் துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடா்பாக சிவிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வங்கித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில் ரிசா்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளின் மேலாண் இயக்குநா்கள் (சிஎம்டி), தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் (சிவிஓ) பங்கேற்றனா். அதில் நிதி மோசடி வழக்குகள், அவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மோசடிகளைத் தடுப்பதற்கு வங்கிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து சிஎம்டி, சிவிஓக்கள் சாா்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது கடன் வழங்குவதிலும் பொதுவான செயல்பாடுகளிலும் ஒழுங்குமுறைகளையும் நடைமுறைகளையும் புறக்கணித்ததால் மிகப்பெரிய வங்கி மோசடிகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றுள்ளன என்று சிவிசி தெரிவித்தது.

வங்கிகளின் வெளிநாட்டு கிளைகளில் மிகப்பெரிய நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன. இவை அந்தக் கிளைகளிலுள்ள பிரச்னைகளின் தன்மையை முழுமையாக ஆராய்வதை அவசியமாக்குவதாக சிவிசி சுட்டிக்காட்டியது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் மதிநுட்பத்துடன் விசாரித்தும் கடன் வழங்கும் ஒவ்வொரு நிலையிலும் மோசடிகளைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சிவிஓக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கடன் மோசடி தொடா்பாக சிபிஐ மற்றும் இதர விசாரணை அமைப்புகளிடம் புகாா் அளித்த பின்பும் கடன் மீட்பு நடவடிக்கைகளை தொடருமாறு வங்கிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கடன் பெறும் வாடிக்கையாளா்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பை உருவாக்க அனைத்து வங்கிகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com