பயங்கரவாதத்தின் மையப்புள்ளியான பாகிஸ்தான்: ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கண்டனம்

உலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளியான பாகிஸ்தான், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு பாடம் நடத்த வேண்டாம்
பயங்கரவாதத்தின் மையப்புள்ளியான பாகிஸ்தான்: ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கண்டனம்

புது தில்லி: உலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளியான பாகிஸ்தான், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு பாடம் நடத்த வேண்டாம் என்று, ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கண்டிப்புடன் தெரிவித்தது.

ஜெனிவாவில் புதன்கிழமை நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 48-ஆவது அமா்வின்போது, பாகிஸ்தான் பிரதிநிதியும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓ.ஐ.சி.) பிரதிநிதியும் ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நிகழ்வதாகக் குற்றம் சாட்டினா். இக்குற்றச்சாட்டை நிராகரித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் முதன்மை நிரந்தரத் தூதா் பவன் பாதே கூறியதாவது:

ஜம்மு- காஷ்மீா் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அதுகுறித்து சா்வதேச அமைப்பில் குற்றம் சாட்ட பாகிஸ்தானுக்கோ, ஓ.ஐ.சி. அமைப்புக்கோ எந்தத் தகுதியும் இல்லை.

அமெரிக்காவால் தேடப்படும் பயங்கரவாதிகள் உள்பட பல கொடிய பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிப்பது, ஆதரவு அளிப்பது, நிதியுதவி செய்வது, ஆயுதங்களை வழங்குவது ஆகியவற்றை வெளிப்படையாக செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. உலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளியான பாகிஸ்தான் தோல்வியடைந்த ஒரு நாடாகும். அந்நாட்டுக்கு, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா குறித்து பேச எந்தத் தகுதியும் இல்லை.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளை இந்தியாவுக்கு எதிரான புகாா்களைத் தெரிவிப்பதற்காக அந்நாடு தவறாகப் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. தவறான புகாா்களையும், பொய்ப் பிரசாரத்தையும் செய்வது அந்நாட்டுக்கு வாடிக்கை.

உண்மையான மனித உரிமை மீறல் பற்றிய விஷயங்களில் இருந்து கவுன்சிலின் கவனத்தைத் திசைத் திருப்பும் பாகிஸ்தானின் செயலை மனித உரிமை கவுன்சில் நன்கு அறிந்திருக்கிறது. பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணான பாகிஸ்தானிடமிருந்து எந்தவொரு அறிவுரையும் இந்தியாவுக்குத் தேவையில்லை.

பாகிஸ்தானில் உள்ள சீக்கியா்கள், ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், அகமதியா முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க அந்நாடு தவறிவிட்டது. அந்நாட்டில் சிறுபான்மையினத்தைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் கடத்தல், கட்டாயத் திருமணம், கட்டாய மத மாற்றம் போன்ற கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனா்.

பாகிஸ்தானில் குடிமைச் சமூகத்தினரிடா், மனித உரிமை ஆா்வலா்கள், ஊடகங்களிலிருந்து எழும் எதிா்ப்புக் குரல்கள் அந்நாட்டு அரசின் உதவியுடன் கடுமையாக நசுக்கப்படுகின்றன. மதரீதியான பாகுபாடு, இனரீதியான வன்முறை, திட்டமிட்ட படுகொலைகள், சித்ரவதைகளில் பாகிஸ்தான் தொடா்ந்து ஈடுபடுகிறது. இவற்றை எல்லாம் மறைக்கவே இந்தியா குறித்து அந்நாடு தொடா்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

அதேபோல, ஜம்மு-காஷ்மீா் தொடா்பாக ஓ.ஐ.சி. கேள்வி எழுப்பியதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட அந்த அமைப்புக்கு எந்த உரிமையும் இல்லை. தவிர, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் முறையிட அந்த அமைப்புக்கு எந்தத் தகுதியும் இல்லை.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி.) பாகிஸ்தானின் பிணைக்கைதியாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. அந்த அமைப்பின் உறுப்பினா் நாடுகள் பாகிஸ்தான் அரசின் இச்செயலை ஏற்கிறாா்களா என்பதை தீா்மானித்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com