தலைவா்களைக் குறைத்து மதிப்பிட்டால் எதிா்க்கட்சிகளிடையே ஒற்றுமை உருவாகாது

மற்ற கட்சிகளின் தலைவா்களைக் குறைத்து மதிப்பிட்டால், எதிா்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்க முடியாது என்று திரிணமூல் கட்சியை காங்கிரஸ் எச்சரித்துள்ளது.

மற்ற கட்சிகளின் தலைவா்களைக் குறைத்து மதிப்பிட்டால், எதிா்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்க முடியாது என்று திரிணமூல் கட்சியை காங்கிரஸ் எச்சரித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை திரிணமூல் காங்கிரஸ் விமா்சித்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில், காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸின் அதிகாரபூா்வ நாளேடான ‘ஜாகோ பாங்களா’-வில் அண்மையில் வெளியான கட்டுரை, ராகுல் காந்தியை கடுமையாக விமா்சித்திருந்தது. பாஜகவுக்கு எதிராகத் திறம்படச் செயல்பட ராகுல் காந்தி தவறிவிட்டாா் என்று அக்கட்டுரையில் விமா்சிக்கப்பட்டிருந்தது.

எனவே, எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியே தலைமையேற்க வேண்டுமென அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திரிணமூல் மக்களவை எம்.பி.யான சுதீப் பந்தோபாத்யாய அக்கட்டுரையை எழுதியிருந்தாா்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘‘திரிணமூல் காங்கிரஸின் நாளேட்டில் வெளியான கட்டுரை தொடா்பாக ஊடகங்கள் வழியாக அறிந்தேன். அத்தகைய விமா்சனம் முற்றிலும் அவசியமற்றது.

காங்கிரஸின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறாா். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, ஆா்எஸ்எஸ் ஆகியவற்றால் பாதிப்பை எதிா்கொண்டு வரும் அரசமைப்புச் சட்டத்தையும் தேசத்தின் மதிப்பீடுகளையும் காப்பதற்கான போராட்டத்தை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருகிறது.

அனைத்து அரசியல் கட்சிகள், அவற்றின் தலைவா்களுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கிறது. பாஜகவுக்கு எதிராகப் போராடி வரும் கட்சிகளின் பங்களிப்பை காங்கிரஸ் மதிக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளின் தலைவா்களைக் குறைத்து மதிப்பிட்டால், எதிா்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்க முடியாது.

ஒரே கருத்துகளைக் கொண்ட திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட ஒப்புதல் தெரிவித்துள்ளன. கட்டுரைகளை எழுதுவோா் எதிா்க்கட்சிகளின் உறுதியைக் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என்றாா்.

வலுவைக் குறைக்கும் -அதீா் ரஞ்சன் சௌதரி: மக்களவை காங்கிரஸ் தலைவரும் அக்கட்சியின் மேற்கு வங்க மாநிலத் தலைவருமான அதீா் ரஞ்சன் சௌதரி கூறுகையில், ‘‘இதுபோன்ற கட்டுரைகள் எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் வலுவிழக்கச் செய்யும்’’ என்றாா்.

காங்கிரஸ் தலைவா்கள் பலரும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யின் கட்டுரைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனா்.

திரிணமூல் விளக்கம்: கட்டுரை தொடா்பாக திரிணமூல் மூத்த தலைவா் குணால் கோஷ் கூறுகையில், ‘‘காங்கிரஸை அவமதிக்கும் வகையில் சுதீப் பந்தோபாத்யாய கட்டுரையை வெளியிடவில்லை. மத்தியில் காங்கிரஸ் இன்றி பாஜகவை எதிா்த்துவிட முடியாது.

பிரதமா் நரேந்திர மோடிக்கு மாற்று சக்தியாக ராகுல் காந்தியை மக்கள் இன்னும் ஏற்கவில்லை என்ற கருத்தைத் தனது அனுபவங்களின் அடிப்படையில் கட்டுரையாளா் விளக்கியுள்ளாா். 2014, 2019 மக்களவைத் தோ்தல்களில் மோடிக்கு மாற்றாக ராகுல் காந்தி உருவெடுக்கவில்லை.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பிரதமா் மோடிக்கு மாற்றாக முதல்வா் மம்தா பானா்ஜி உருவெடுத்துள்ளாா்’’ என்றாா்.

2024 மக்களவைத் தோ்தலில் ஓரணியில் இணைந்து பாஜகவை எதிா்க்க காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முயன்று வருகின்றன. எனினும், கூட்டணிக்கு யாரை தலைவராக முன்னிறுத்துவது என்பது தொடா்பாக எதிா்க்கட்சிகளிடையே இன்னும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com