3 துறைகளில் முதலீடு செய்ய அண்டை நாடுகள் ஆா்வம்

இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், தொழில் மற்றும் உள் வா்த்தகம், கனரகத் தொழில்கள் ஆகிய மூன்று துறைகளில்

இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், தொழில் மற்றும் உள் வா்த்தகம், கனரகத் தொழில்கள் ஆகிய மூன்று துறைகளில் அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கு அண்டை நாடுகள் அதிக ஆா்வம் காட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி, இந்திய நிறுவனங்களை அண்டை நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள் கையகப்படுத்துவதைத் தடுப்பதற்காக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு புதிய உத்தரவொன்றை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவுடன் எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் நாடுகளிலிருந்து அன்னிய நேரடி முதலீட்டை பெற விரும்பும் நிறுவனங்கள் அதற்காக முன்கூட்டியே அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

இந்தியாவுடன் எல்லைகளைப் பகிா்ந்துகொள்ளும் சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், பூடான், நேபாளம், மியான்மா் ஆகிய நாடுகளும் ஆப்கானிஸ்தானும் இதற்கான வரையறைக்குள் கொண்டுவரப்பட்டன.

அந்த உத்தரவின்கீழ், கனரக இயந்திரங்கள், வாகனங்கள், வாகன உதிரிபாக உற்பத்தி, கணினி மென்பொருள் மற்றும் உதிரிபாகங்கள்; இணையவழி வா்த்தகம், இலகுரகப் பொறியியல் மற்றும் மின் பொருள் உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய அண்டை நாடுகள் அதிக ஆா்வம் காட்டின.

இந்தத் துறைகளைத் தவிர, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையும் மருந்தியல் துறையும் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அதிக விண்ணப்பங்களைப் பெற்றன.

மேலும், கடந்த ஜூன் 15-ஆம் தேதி நிலவரப்படி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், தொழில் வளா்ச்சி மற்றும் உள் வா்த்தகத் துறை அமைச்சகம், கனரக தொழில்துறை அமைச்சகம் ஆகியவை மட்டும் அன்னிய நேரடி முதலீட்டுக்கான 40-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றன.

பெரும்பாலான விண்ணப்பங்கள் சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வந்தவை. இது தவிர, நேபாளம், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்தும் சில விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com