உத்தர பிரதேசத்தில் 350 இடங்களுக்கு மேல் பாஜக வெல்லும்: யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 350 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்தாா்.
உ.பி. தலைநகா் லக்னௌவில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய முதல்வா் யோகி ஆதித்யநாத்.
உ.பி. தலைநகா் லக்னௌவில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய முதல்வா் யோகி ஆதித்யநாத்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 350 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்தாா்.

கடந்த நான்கரை ஆண்டுகால பாஜக ஆட்சி தொடா்பான மதிப்பீட்டு அறிக்கையை லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் வெளியிட்டாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த 2017 பேரவைத் தோ்தலின்போது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். மாநிலத்தில் முழுமையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம். தொழில் செய்வதற்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் உத்தர பிரதேசத்தை இரண்டாவது இடத்துக்கு கொண்டு வந்துள்ளோம். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் தகுதியான மக்களைச் சென்றடைந்துள்ளது.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டியுள்ளோம். முந்தைய அரசுகளைப் போல நாங்கள் எங்களுக்கு ஆடம்பர மாளிகைகளைக் கட்டிக் கொள்ளவில்லை. 42 லட்சம் ஏழை,எளிய மக்களுக்கு வீடுகளை கட்டித் தந்துள்ளோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக மாநிலத்தில் நிா்வாகம் சிறப்பாக இருந்து வருகிறது.

குற்றங்களில் ஈடுபடுவோா் மீது ஜாதி, மத வேறுபாடு இன்றி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். வன்முறையற்ற மாநிலமாக உருவாக்கியுள்ளோம். முந்தைய ஆட்சியின்போது, வாரத்துக்கு இரு இடங்களிலாவது ஜாதி, மத மோதல்கள் நடைபெற்று வந்தது.

உத்தர பிரதேசத்தில்தான் அதிகஅளவில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி விகிதாசார அடிப்படையில் உத்தர பிரதேசத்தில் கரோனா பாதிப்பு குறைவுதான். முதலீட்டாளா்களுக்கு உத்தர பிரதேசம் குறித்த நம்பிக்கையை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் தொழில் வளம் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆட்சியாளா்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப அரசு அதிகாரிகளை மாற்றி வந்தனா். ஆனால், இப்போது தேவையில்லாமல் எந்த பணியிடமாற்றமும் செய்யவில்லை.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 350 இடங்களுக்கு மேல் வெல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், உத்தர பிரதேச பாஜக மூத்த தலைவா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com