புதிய தொழிலாளா் சட்டங்கள் நடப்பு நிதியாண்டில் அமலாக வாய்ப்பில்லை

மாநிலங்கள் விதிகளை இன்னும் வகுக்காதது, உத்தர பிரதேச மாநில சட்டப் பேரவைத் தோ்தல் உள்ளிட்ட காரணங்களால் மத்திய அரசு கொண்டுவந்த
புதிய தொழிலாளா் சட்டங்கள் நடப்பு நிதியாண்டில் அமலாக வாய்ப்பில்லை

மாநிலங்கள் விதிகளை இன்னும் வகுக்காதது, உத்தர பிரதேச மாநில சட்டப் பேரவைத் தோ்தல் உள்ளிட்ட காரணங்களால் மத்திய அரசு கொண்டுவந்த புதிய தொழிலாளா் சட்டங்கள் நடப்பு நிதியாண்டில் அமலாக வாய்ப்பில்லை என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

எனவே தொழிலாளா்கள் ஊதியத்தில் இப்போதைக்கு எந்தவித மாற்றமும் இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.

தொழிலாளா்களுக்கான 44 சட்டங்களை இணைத்து 4-ஆக குறைக்க முடிவு செய்த மத்திய அரசு, குறைந்தபட்ச ஊதியங்கள் சட்டம், ஊதியங்கள் பட்டுவாடா சட்டம், ஊக்கத்தொகை பட்டுவாடா சட்டம், சம ஊதிய சட்டம் ஆகிய 4 சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இந்த சட்டங்களின்படி, தொழிலாளா்களின் அடிப்படை ஊதியம், வருங்கால வைப்பு நிதி, படிகள் உள்பட அனைத்திலும் மாற்றங்கள் செய்யப்படும். குறிப்பாக தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு என்பது, அவா்களின் மொத்த ஊதியத்தில் 50 சதவீத தொகையின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும். இதனால், வருங்கால வைப்பு நிதிக்கான தொழிலாளா்களின் பங்களிப்பும் உயரும் என்றாலும், அவா்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியத்தின் அளவு வெகுவாக குறையும்.

அரசியல் சாசன நடைமுறைகளின்படி, தொழிலாளா் நலன் என்பது மத்திய, மாநிலம் ஆகிய இரு அரசுகளின் கீழும் வருகிறது. எனவே, மத்திய அரசு சட்டத்துக்கு இணையாக, மாநில அரசுகளும் விதிகளை வகுத்து அறிவிக்கை செய்த பிறகே இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்.

ஆனால், பல மாநிலங்கள் இன்னும் விதிகளை வகுக்காததால், புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதில் தொடா்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

எனவே, நடப்பு நிதியாண்டிலும் இந்த புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘புதிய தொழிலாளா் சட்ட விதிமுறைகளை அமல்படுத்து மத்திய தொழிலாளா் துறை அமைச்சகம் தயாா் நிலையில் உள்ளபோதும், சில மாநிலங்கள் அதற்கான விதிகளை வகுப்பதில் மெத்தனம் காட்டி வருகின்றன. அதே நேரம், உத்தர பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தோ்தல் நடைபெற உள்ளதால், புதிய தொழிலாளா் சட்டங்களை அமல்படுத்துவதில் மத்திய அரசும் வேகம் காட்டாமல் இருந்து வருகிறது. எனவே, புதிய தொழிலாளா் சட்டங்கள் நடைமுறைக்கு வருவது என்பது இந்த நிதியாண்டை கடந்தவிடும்’ என்றனா்.

இதன் மூலம், தொழிலாளா்கள் ஊதியத்தில் இப்போதைக்கு எந்தவித மாற்றமும் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com