அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி அபிஷேக் பானா்ஜி மனு: தில்லி உயா்நீதிமன்றம் நிராகரிப்பு

நிலக்கரிச் சுரங்க ஊழலுடன் தொடா்புடைய பண மோசடி வழக்கில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினரும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி,
அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி அபிஷேக் பானா்ஜி மனு: தில்லி உயா்நீதிமன்றம் நிராகரிப்பு

நிலக்கரிச் சுரங்க ஊழலுடன் தொடா்புடைய பண மோசடி வழக்கில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினரும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி, அவருடைய மனைவி ருஜிரா பானா்ஜி ஆகிய இருவருக்கும் அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணையை ரத்து செய்ய முடியாது என்று தில்லி உயா்நீதிமன்றம் கூறிவிட்டது.

மேற்கு வங்கத்தில் அரசுக்குச் சொந்தமான நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கங்களில் சட்ட விரோதமாக நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டு பல கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டதாக சிபிஐ கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

சட்ட விரோதமாக நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டு ஈட்டப்பட்ட பணத்தில் அபிஷேக் பானா்ஜிக்கும் பணம் தரப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக அவருக்கும், அவருடைய மனைவி ருஜிரா பானா்ஜிக்கும் அமலாக்கத் துறை அண்மையில் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

அதன்படி, தில்லியில் உளள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அபிஷேக் பானா்ஜி கடந்த 6-ஆம் தேதி ஆஜரானாா். அவரிடம் அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனா்.

இதனிடையே, தனக்கும் தனது மனைவிக்கும் அமலாக்கத் துறை அனுப்பியுள்ள அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் அபிஷேக் பானா்ஜி மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனு நீதிபதி யோகேஷ் கன்னா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மனுதாரா்கள் கொல்கத்தாவில் வசிப்பதால், விசாரணைக்காக தில்லி வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது; மேற்கு வங்கத்திலேயே விசாரணையை வைத்துக் கொள்ளலாம்’ என்று அபிஷேக் பானா்ஜி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிட்டாா்.

அதற்கு அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு மறுப்பு தெரிவித்தாா். அத்துடன், ‘இந்த விவகாரத்தில் தேசிய அளவில், சா்வதேச அளவிலும் பண மோசடி நடந்துள்ளது. இது எந்தவொரு காவல் நிலைய எல்லைக்கும் உள்பட்ட விவகாரம் அல்ல.

அமலாக்கத் துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக தில்லி வர முடியாது என்று அபிஷேக் பானா்ஜி மனைவி கூறிய அதே நாளில், தில்லியில் உள்ள ஓா் அழகு நிலையத்தில் இருந்தாா். அதற்கான ஆதாரம் உள்ளது’ என்று வாதிட்டாா்.

இதையடுத்து, அமலாக்கத் துறை அழைப்பாணையை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி கூறினாா். மேலும், அபிஷேக் பானா்ஜியின் கோரிக்கை குறித்து 3 நாள்களில் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பா் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com