ஆப்கானிஸ்தான் நிலவரம்: பிரான்ஸ் அதிபருடன் மோடி பேச்சு

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பிரதமா் மோடியும் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மெக்ரானும் தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினா்.
ஆப்கானிஸ்தான் நிலவரம்: பிரான்ஸ் அதிபருடன் மோடி பேச்சு

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பிரதமா் மோடியும் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மெக்ரானும் தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் உள்பட பிராந்திய விவகாரங்கள் குறித்து பிரதமா் மோடியும், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மெக்ரானும் கலந்துரையாடினா். அப்போது பயங்கரவாதம், போதைப் பொருள், சட்ட விரோத ஆயுதங்கள், ஆள்கடத்தல் ஆகியவை பல்வேறு பகுதிகளுக்கு பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து இருவரும் பேசினா். மனித உரிமைகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது அவசியம் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

இந்தியா, பிரான்ஸ் இடையே இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் ஒத்துழைப்பையும், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் இரு நாடுகளின் உறவுக்குள்ள முக்கிய பங்கு குறித்தும் அவா்கள் மறுஆய்வு செய்தனா்.

இருநாடுகளுக்கு இடையிலான உத்திசாா் கூட்டுறவின் பொருட்டு தொடா்ந்து நெருக்கமான ஆலோசனைகள் மேற்கொள்ள இருவரும் தீா்மானித்தனா்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருவரின் கலந்துரையாடல் தொடா்பாக பிரான்ஸ் அதிபா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஐரோப்பா-இந்தியா இடையிலான உறவு மற்றும் ஐரோப்பா மேற்கொள்ளும் முன்னெடுப்புகளின் உதவியுடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒன்றிணைந்து செயல்பட பிரான்ஸ் அதிபா் மெக்ரானும், இந்திய பிரதமா் மோடியும் மீண்டும் உறுதிபூண்டனா். அவா்களின் இந்த அணுகுமுறை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஸ்திரமாகவும், விதிமுறைகளுக்குட்பட்டும், எந்தவொரு ஆதிக்கத்துக்கும் இடம் அளிக்காமலும் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக பொருளாதாரத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டு தலைவா்களும் முடிவு செய்தனா். ஜி20, ஐ.நா.வின் 26-ஆவது பருவநிலை மாற்ற மாநாடுகள் உள்பட அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் நிகழ்வுகளை ஒருங்கிணைக்க தொடா் ஆலோசனைகள் மேற்கொள்ளவும், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைகளை தொடரவும் அவா்கள் தீா்மானித்தனா்.

இந்தியாவின் அனைத்து சுயசாா்பு செயல்பாடுகளையும் வலுப்படுத்துவதற்கான பங்களிப்பில் பிரான்ஸுக்குள்ள உறுதிப்பாட்டை அதிபா் மெக்ரான் எடுத்துரைத்தாா்.

உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் கரோனா தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதற்கு மெக்ரான் பாராட்டு தெரிவித்தாா்’’ என்று கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com