உணவு மானிய நிலுவை ரூ.5,231 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் தமிழகம் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு தரவேண்டிய உணவு மானிய நிலுவைத் தொகையான ரூ.5,231 கோடியை உடனடியாக வழங்குமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், மாநில உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி வலியுறுத்தினார்.
உணவு மானிய நிலுவை ரூ.5,231 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் தமிழகம் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு தரவேண்டிய உணவு மானிய நிலுவைத் தொகையான ரூ.5,231 கோடியை உடனடியாக வழங்குமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், மாநில உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி வலியுறுத்தினார்.
 தில்லி உத்யோக் பவனில் உள்ள மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சக அலுவலகத்தில் அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக அமைச்சர் அர.சக்கரபாணி சந்தித்தார். பின்னர், தமிழக அமைச்சர் அர.சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உணவு மானிய நிலுவைத் தொகை ரூ.5,231 கோடியை உடனடியாக வழங்குமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் கேட்டுக் கொண்டேன். இது தொடர்பாக அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்த அமைச்சர், அந்தத் தொகையை விடுவிக்க ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
 தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து அவற்றை தனியார் அறவை முகவர்களுக்கு அனுப்பி வைக்கிறது. அதன்படி, மத்திய அரசு கடந்த 2005 -ஆம் ஆண்டு முதல் பச்சரிசிக்கு குவிண்டலுக்கு ரூ.10, புழுங்கல் அரிசி குவிண்டலுக்கு ரூ. 20 வழங்கி வருகிறது. இதை உயர்த்தி பச்சரிசி, புழுங்கல் அரசிக்கு முறையே குவிண்டால் ரூ. 60, ரூ. 100 என வழங்க வேண்டும்.
 வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் தமிழக அரசு, 1 கிலோ அரிசி ரூ. 20 என்ற விலையில் மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து வாங்குகிறது. இதை கிலோவுக்கு ரூ.15-ஆக குறைத்துத் தர வேண்டும். தமிழகத்தில் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு உள்ளிட்ட பொருள்களை மாநில அரசு வெளிச்சந்தை விலையை விட குறைவாக வழங்கி வருகிறது. தேவையான துவரம் பருப்பை வழங்க தேசிய வேளாண் கூட்டுறவு சம்மேளனத்திற்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டோம்.
 தமிழகத்தில் காரீஃப் பருவத்தில் நெல் கொள்முதல் செய்யும் போது, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் எற்படுகிறது. இதனால் நெல் கொள்முதலில் 17 சதவீதம் ஈரப்பதம் என்பதை 20 சதவீதமாக உயர்த்தித் தர கோரப்பட்டது. இதற்கு சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததார்.
 இந்த ஐந்து கோரிக்கைகளையும் மத்திய அமைச்சர் நிறைவேற்றித் தருவார் என நம்புகின்றேன். அரிசி உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க தமிழகத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில் ஒரு மணி நெல் கூட மழையில் நனைந்து வீணாகிவிடக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் சக்கரபாணி.
 இந்தச் சந்திப்பின் போது, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலர் மு.நசிமுதின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் வி.ராஜாராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com